தெலங்கானாவில் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாகத்திற்கான அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு 1,820 எம்.பி.பி.எஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், இந்த கூடுதல் இடங்கள், கிட்டத்தட்ட 18 மருத்துவக் கல்லூரிகளை (ஒவ்வொன்றும் 100 மருத்துவ இடங்கள்) நிறுவுவதற்குச் சமமாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023 Counselling: நீட் கவுன்சலிங்; தமிழகத்தில் இதுவரை 30,000 பேர் விண்ணப்பம்; எம்.பி.பி.எஸ் சீட் அதிகரிக்க வாய்ப்பு
தெலங்கானா மாநில மருத்துவ சேர்க்கை விதிமுறைப்படி, மருத்துவக் கல்லூரிகளில் மாநில நிர்வாக ஒதுக்கீட்டில் 85 சதவீத இடங்கள் தெலங்கானா மாணவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மருத்துவ சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு நிர்வாக ஒதுக்கீட்டில் 100 சதவீத எம்.பி.பி.எஸ் இடங்களையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி, தெலங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்னதாக தொடங்கப்பட்ட 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,850 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில், 1,895 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் நிலையில், அதில் 15 சதவீத இடங்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பொது இடஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டது. இதில், பெரும்பாலான இடங்கள் தெலங்கானா மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தெலுங்கானாவில் 20 மருத்துவக் கல்லூரிகள் (அரசு மற்றும் தனியார்) இருந்தன, 2023-34ல் மொத்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை (அரசு மற்றும் தனியார்) 56 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், 2014க்கு முன், 2850 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன மற்றும் 2023ல் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் இரண்டிலும் எம்.பி.பி.எஸ் இடங்கள் 8340 ஆக உயர்ந்துள்ளன.
இந்நிலையில், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தெலங்கானாவில் தொடங்கப்பட்ட 36 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 100 சதவீத எம்.பி.பி.எஸ் இடங்களும் தெலங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,490 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.