கல்வி துறையில் இந்த வாரம் பல முக்கிய நிகழ்வுகள் ஏற்பட்டன. தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு, தேர்வை ஒத்திவைக்க கோரும் மாணவர்கள், இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிக்காத பேராசிரியர்கள் என பல முக்கிய விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை இங்கே காணலாம்.
CUET 2022
என்டிஏ நடத்தும் CUET 2022 நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடுவை நீட்டித்துள்ளது. முன்னதாக, விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் மே 22 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இதுவரை தேர்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களும், cuet.samarth.ac.in என்கிற தளத்தில் ரெஜிஸ்டர் செய்யலாம்.
விண்ணப்பக் கால்கெடுவுடன் சேர்ந்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 22 ஆம் தேதி 11.50 மணி வரை, தேர்வர்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள மே 25 முதல் மே 31 வரை வாய்ப்பு அளிக்கப்படும்.
NEET-UG 2022
2022 நீட் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 15-05-2022 இரவு 11.50 மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மே 6 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மே 1 அன்று NEET-UG 2022 மதிப்பெண்கள் அடிப்படையிலே அனைத்து மாணவர் சேர்க்கையும் நடைபெறவேண்டும் என்கிற அறிவிப்பை தொடர்ந்து விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ மாணவர்கள்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, நாடு திரும்பிய பல இந்திய மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் டெல்லியின் ‘ரஷ்யா சார்பு’ நிலைப்பாட்டை பிரதிபலிக்கக்கூடும் என்று நம்புவதாகக் கூறுகிறார்கள்.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முயற்சிக்கையில், கிழக்கு ஐரோப்பிய நாட்டின் எல்லையில் உக்ரைனியப் படைகளின் கைகளில் வன்முறை மற்றும் நியாயமற்ற சிகிச்சையை எதிர்கொண்டதாகக் கூறினர்.
சில மாணவர்கள் அரசு பிரதிநிதிகளை பலமுறை தொடர்பு கொண்டும், எதிர்காலம் குறித்து சரியான பதில் இல்லை என்று தெரிவித்தனர். மாணவர்கள் ஏற்கனவே இந்த செமஸ்டருக்கான கட்டணத்தை உக்ரைன் பல்கலைக்கழகங்களில் செலுத்திவிட்டனர். இல்லையென்றால், அவர்களால் ஆன்லைன் வகுப்பை தொடர முடியாத நிலை இருந்தது.
இதற்கிடையில், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் ஒன்றுக்கூடி, NEET PG 2021 க்கான தற்போதைய கவுன்சிலிங்கை சுட்டிக்காட்டி, மே 21 அன்று நடைபெறவிருந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேர்வு முடிவு 2022
மகாராஷ்டிரா
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 5 முதல் 10ஆம் தேதிக்குள்ளும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள்ளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் இடைநிலைக் கல்வி வாரியம் (CGBSE) போர்டு டாப்பர்களுக்கு புதிய வெகுமதி அறிவித்துள்ளது. இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதலிடம் பெறுபவர்கள் அனைவருக்கும் இலவச ஹெலிகாப்டர் சவாரி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு இலவச ஹெலிகாப்டர் சவாரி வழங்கப்படும். இது மாணவர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்து, கனவை வென்றிட போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.
தமிழக பள்ளிகளில் காலை உணவு திட்டம்
நாட்டிலேயே முதல் மாநிலமாக, அரசு பள்ளிகளில் மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil