பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு இன்று ( மே 5) நடக்கிறது. நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் 1.40 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்காக 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதையெல்லாம் அவர்கள் செய்ய வேண்டும்; எதையெல்லாம் அவர்கள் செய்யக்கூடாது என்பது போன்ற விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன. பட்டியல் இதோ:
தேர்வு மையத்திற்கு 12:30 மணிக்கு வந்து விடவும்.
எடுத்து வர வேண்டியவை:
NTA தளத்தில் தரவிறக்கம் செய்த அனுமதிச்சீட்டு
ஒரு பாஸ்போர்ட் புகைப்படம் (ஆன்லைனில் விண்ணப்பித்த போது பயன்படுத்திய அதே படம்)
அடையாள அட்டை (ஆதார், PAN, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை)
மாற்றுத்திறனாளி சான்றிதழ் (கூடுதல் நேரத்திற்கு அனுமதி பெற்றவர்கள் கவனத்திற்கு)
ஆடைகள்:
அடர் நிற ஆடைகளை தவிர்க்கவும். அரைக்கை சட்டை/ஆடை அணியவும்.
பாரம்பரிய ஆடைகளில் வருபவர்கள் ஒரு மணிநேரத்திற்கு முன்னரே (12:30 மணி) வருவது சோதனையை விரைவாக செய்ய உதவும்.
ஸ்லீப்பர்/சான்டல் வகை செருப்புகளை அணியவும். லோ ஹீல்ஸ் அணிவது நல்லது.
தேர்வறையில்:
தேர்வின் போது வழங்கப்படும் வழிகாட்டுதல்கள், அறிவிப்புகளை கவனித்து செயல்படவும்.
தேர்வறையில் தரப்படும் வினாத்தாளிலேயே கணக்குகளைப் போட்டு பார்க்க வேண்டும்.
ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள். ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில் தந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
செய்யக்கூடாதவை:
முழுக்கை டி. சர்ட்கள், சட்டைகள் அணியக்கூடாது. ஷூவிற்கு அனுமதியில்லை.
பேனா, பேப்பர், பர்ஸ், கைக்கடிகாரம், நகைகள், அலைபேசிகள், பெல்ட், தொப்பி தவிர்க்கப்பட வேண்டும். தேநீர், காபி, தண்ணீர், பழச்சாறு தின்பண்டங்கள் கொண்டுவரக்கூடாது. பேக் செய்யப்பட்ட உணவுகளுக்கு அனுமதியில்லை. சர்க்கரை நோயாளிகள் மட்டும் தண்ணீர் பாட்டில் ( பாட்டிலின் உள்ளே இருப்பது தெளிவாக தெரியும் பாட்டில்), பழங்கள், மாத்திரைகளை முன் அனுமதியோடு கொண்டு வரலாம்.