செப்டம்பர் 13 அன்று நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ் , ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 96 சதவீத கேள்விகள் தமிழக பாட திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2018-19 ஆம் ஆண்டில் 11ம் வகுப்பு, 2019-20 ஆம் ஆண்டில் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தையும் மாநில அரசு புதுப்பித்தது. மத்திய அரசின், என்.சி.இ.ஆர்.டி.புத்தகத்தை ஈடு செய்யும் விதமாக தமிழக அரசின் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நீட் தேர்வு உயிரியலில் பிரிவில் கேட்கப்பட்ட 90 வினாக்களில், 87 வினாக்கள், தமிழக பாட திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன. இயற்பியல் மற்றும் வேதியியலில், 45க்கு தலா, 43 வினாக்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம், மொத்த 180 வினாக்களில், 173 வினாக்கள் நேரடியாக தமிழக பாட திட்ட புத்தகத்தில் இருந்து இடம் பெற்றுள்ளது.
பாடப்புத்தகங்கள் புதுபிக்கப்படுவதற்கு முன்பாக, தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 60% கேள்விகள் மட்டும் தான் நீட் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, தமிழக அரசின் பாடப்புத்தகங்களிலிருந்து நேரடி கேள்விகள் அதிக எண்ணிகையில் இருப்பதால், பயற்சி மையம் செல்ல முடியாத மாணவர்கள் கூட அதிக மதிப்பெண்கள் பெறலாம் என கல்வியாளர்கள நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,250 இடங்கள் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க அரசுக்கு பரிந்துரை அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil