நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான மாநில தரவரிசைப் பட்டியல் வெளியாகாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி. டி. எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 16ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை மாநிலவாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் உள்ளது.
இதனால், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழக அரசு அமைத்த உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் குழு, மருத்துவக் கல்லூரிகளில் 10% இடங்களை ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையைத் தமிழக அரசு ஏன் அப்படியே ஏற்கவில்லை? என்று மு.க ஸ்டாலின் கூறினார்.
மேலும், " தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பு 2015-16 கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 456 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 54 பேரும், 2016-17 கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 438 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 99 பேரும் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, 2017-18 கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 40 மட்டுமே. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. 2018-19 கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 88 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 18 பேரும் சேர்ந்துள்ளனர். இதிலிருந்தே நீட் தேர்வு எந்தளவுக்கு மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடியும்.
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கிற 7,968 மேல்நிலைப் பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் மட்டும் 3,054. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மொத்த மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 3.4 லட்சம் பேர். அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும் 0.15 சதவீதம் மட்டுமே. இந்த நிலையில், நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைத்த 10 சதவீதத்தை எந்த அடிப்படையில் 7.5 சதவீதமாக எடப்பாடி அரசு குறைத்தது? இதுதான் ஏழை எளிய மாணவர்களுக்குச் செய்யும் நீதியின் லட்சணமா?" என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க நீதிபதி குழு பரிந்துரைத்தது. யாருக்கு பயந்து @CMOTamilNadu 7.5% ஆகக் குறைத்தார்? அதற்கும் கூட ஆளுநரிடம் அனுமதி வாங்க வக்கற்றவர்களாக இருக்கிறார்கள்.
திமுக ஓயாது; போராட்டம் தொடரும்; ஆறு மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்! pic.twitter.com/2NfdPw3j9h
— M.K.Stalin (@mkstalin) October 25, 2020
தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 57 புள்ளி நான்கு நான்கு சதவீதம் பேர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணுக்கும் கூடுதலாகப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு எட்டு புள்ளி எட்டு ஏழு சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.