மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12 தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்த நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் ஆரம்பமாகின்றன. நாளை மாலை 5 முதல் ஆன்லைன் மூலம் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படும் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155 ல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 2020 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட 3862 மையங்களிலிருந்து தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, தேர்வு மையத்தில் அனைத்து மாணவர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்படும். மாணவர்களின் நலன் கருதி தொடர்பு இல்லாத பதிவுமுறை, சரியான சுத்திகரிப்பு, சமூக இடைவெளியோடு அமர்வது போன்றவையும் உறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நீட் வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை என்று கூறினார். மேலும், நீட் தேர்வு குறித்து தமிழக அரசு அமைத்த ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன் பின்னர் நீட் தேர்வு குறித்த முடிவு அறிவிக்கப்படும். இருப்பினும், மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை, தமிழக அரசின் பயிற்சி மாணவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதே தமிழக அரசின் நிலைப்பாடு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவது தவறில்லை எனவும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil