தேசிய சோதனை முகமை நடத்தும் (என்.டி.ஏ) இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு ) இந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது.
உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்: 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று 108 விதியின் கீழ் பேசிய முதல்வர், " அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குறைந்தளவில் தேர்ச்சி பெறுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டதிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுதாக்கல் செய்திருந்தது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாகவும் தனது வாதத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
நீட் தேர்வு: அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்துமாறு 1956ன் இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ எம் சி) சட்டம் பிரிவு 10 (டி) குறிப்பிடுகிறது. இதன்படி 2016-17 கல்வியாண்டிலிருந்து நீட் அறிமுகம் செய்யப்பட்டது.
குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவுபே கடந்த ஆண்டு மாநிலங்களவையில் இன்று (27.03.2018) எழுத்து மூலம் அளித்த பதிலில் "1956ல் ஐஎம்சி சட்ட விதி எந்தவொரு மாநிலத்திற்கும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்த வகை செய்கிறது" என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil