நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதால், மருத்துவ படிப்புகளில் சேசர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
2018ம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில், தமிழகத்தில் இருந்து 1, 14,602 மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர். இவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 39.55 சதவீதமாக இருந்தது. இதனிடையே, இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் 123078 மாணவர்கள் தேர்வு எழுதினர்., இதில், 59785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். சதவீதத்தின் அடிப்படையில் இது 48.57 சதவீதம் ஆகும்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், இந்தாண்டு 25 வரை அதிகரிக்க கூடும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு, அரசு மருத்துவ கல்லூரிகளில், சேர OC பிரிவு மாணவர்கள் - 424 கட் ஆப் மதிப்பெண்கள்
BC பிரிவு மாணவர்களுக்கு - 369 கட் ஆப் மதிப்பெண்கள்
BCM பிரிவு மாணவர்களுக்கு - 343 கட் ஆப் மதிப்பெண்கள்
MBC பிரிவு மாணவர்களுக்கு 323 கட் ஆப் மதிப்பெண்கள்
SC பிரிவு மாணவர்களுக்கு 264 கட் ஆப் மதிப்பெண்கள்
ST பிரிவு மாணவர்களுக்கு 199 கட் ஆப் மதிப்பெண்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, எஸ்.ஆர்.வி. பள்ளிகளின் செயலாளர் சுவாமிநாதன் கூறியதாவது, இந்தாண்டு BC பிரிவு மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் 40 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் பள்ளியிலேயே, 400 மதிப்பெண்களுக்கு மேல், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாங்கியிருப்பதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,250 இடங்கள் இந்தாண்டு நிரப்பப்பட உள்ளன. தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 5,634 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் ; இவர்களில் 3,705 மாணவர்கள் 351 முதல் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த மாணவர்களுக்கு, இந்தாண்டு (2019) நீட் தேர்வு, மிக எளிமையாக அமைந்திருந்தது. மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவர்களின் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, கட் ஆப் மதிப்பெண்களும் அதிகரிக்க இருப்பதாக மற்றொரு கல்வியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் உள்ள 13 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,600 இடங்கள் கடந்தாண்டு நிரப்பப்பட்டன. இவைகளில், 862 இடங்கள், அரசு ஒதுக்கீட்டிலும், 730 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்பட்டன.
இந்தாண்டு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்கில் ஏறக்குறைய 4,100 மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள், நீட் தேர்வில் பெற்றுள்ள அதிக மதிப்பெண்களின் காரணமாக, மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்க இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.