நீட் தேர்வு குறித்து பாஜக தமிழக துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை சில புள்ளிவிவரங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
‘தமிழ்நாட்டில் (நீட் தேர்வுக்கு) விண்ணப்பித்தவர்கள் - 121617, எழுதியவர்கள் - 99610. தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் - 57215. தேர்ச்சி சதவீதம் - 57.44%. சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் +8.87%
தமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் - 5550. (அகில இந்திய கோட்டாவுக்கு தமிழகம் விட்டுக் கொடுத்தது போக) தமிழ் நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் - 4717 (85%). இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்கல்லூரி இடங்கள் - 82926. அதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேர வாய்ப்புள்ள இடங்கள் = 11606 ((82926-5550)*0.15))
தேர்ச்சி பெற்ற 57215 மாணவர்களில் தமிழ்நாட்டிலுள்ள 4717 இடங்கள் (போக), மீதமுள்ள 52498 மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் 11606 இடங்கள் உள்ளன. வெறும் 833 (15%) இடங்கள் என்ற இடத்தில் 11606 இடங்கள். கிட்டத்தட்ட 1400% அதிகம். இது எப்படி தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் தேர்வாகும்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை.
அதாவது, தமிழகத்தில் உள்ள மொத்த சீட்களில் 4717 இடங்களை தமிழக மாணவர்களே நிரப்ப இருக்கிறார்கள். அகில இந்தியக் கோட்டாவுக்கு நாம் விட்டுக் கொடுப்பது 833 இடங்கள்தான். இதற்கு பதிலாக 11606 இடங்களுக்கு, நம் மாணவர்கள் 52,498 பேர் போட்டியிட முடியும். அதாவது நாம் விட்டுக் கொடுத்த இடத்தைவிட 14 மடங்கு அதிகமான இடங்களுக்கு நமது மாணவர்கள் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிறார் அண்ணாமலை.
இதற்கு ட்விட்டரில் வெளியாகியிருக்கும் சில கமெண்ட்களைப் பார்க்கலாம்.
பூபதி என்பவர், ‘ஆல் இந்தியா ரேங்க ஒரு வேளை எடுக்க முடிந்தாலும் , தமிழ்நாட்டில் உள்ள யாரும் தன் குழந்தைகளை வட மாநிலங்களில் உள்ள கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். இங்கதான் சேர்வார்கள்.
ஆக, எப்படி பார்த்தாலும் நீங்க சொல்ற 15% "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என குறிப்பிட்டிருக்கிறார்.
சிவா என்பவர், ‘நீட் தேர்வு வருவதற்கு முன்பே அகில இந்திய ஒதுக்கீடு இருந்தது. 1400% அதிகம் என்று சொல்லும் நீங்கள் AIQ கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு என்று சொல்லுங்க? பிற மாநிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் வருவார்கள் என்பதை ஏன் சொல்லவில்லை ?’ என கேள்வி எழுப்புகிறார்.
ஹரன் என்பவர், ‘தேர்ச்சி பெறுவதன்பது 720க்கு120 மார்க் எடுப்பது.. கல்லூரியில் இடம் கிடைக்க முதல் 5550 இடங்களில் வந்திருக்க வேண்டுமல்லவா.. அரசுப்பள்ளியில் முதலிடம் பெற்ற ஜீவித்தின் இடமே 1800களில். எனில் முதல் 5500 இடங்களில் எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் இருப்பர்?’ என கேள்வி எழுப்புகிறார்.
சரவணப் பெருமாள் என்பவர், ‘இந்த விளக்கத்தை எல்லா மக்களும் தெரிந்து கொள்ளும்படி மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஊடகங்கள் இது மாதிரியான புள்ளி விவரங்களை இருட்டடிப்பு செய்கின்றன.’ என்கிறார்.
இது தொடர்பாக காரசார விவாதம் இணையத்தில் நடக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"