இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) கல்வி நிறுவனத்தை சேர்ந்த பழைய மற்றும் தற்போதைய மாணவர்கள் ஒன்றாக இணைந்து ஜே.இ.இ முதன்மை மற்றும் நீட் தேர்வர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து கொடுக்கும் இணைய போர்ட்டலை உருவாக்கியுள்ளனர். ஜே.இ.இ முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13 அன்றும் நடைபெற உள்ளது.
ஐ.ஐ.டி டெல்லி இயக்குனர் வி ராம்கோபால் ராவின் வேண்டுகோளைத் தொடர்ந்து eduride.in என்ற போர்டல்- தொடங்கப்பட்டது. ரோஹித் கோஷி ( ஐ.ஐ.டி.டி.ஏ.ஏ முன்னாள் தலைவர்) சன்ஸ்கர் ஜெயின் (ஐ.ஐ.டி பம்பாய் முன்னாள் மாணவர்) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த போர்டல், தொலைதூர மற்றும் சாலை வசதிகள் இணைக்கப்படாத பகுதிகளிலிருந்து தேர்வு எழுத வரும் மாணவர்களின் பயண சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேர்வுக்கு பயணம் செய்ய விரும்பும் மாணவர்கள் , eduride.in என்ற போர்டலில் தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து உதவி கோரலாம். இதைத் தாண்டி,காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தொலைபேசி (9311323756) வாயிலாகவும் போக்குவரத்து உதவி கோரலாம்.
மாணவர்களின் போக்குவரத்துக்கு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் மேற்கூறிய இணைய போர்டலில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். நன்கொடை வழங்குவதற்கான வாய்ப்பும் போர்டலில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் முயற்சியை வெகுவாக பாராட்டிய இயக்குனர் வி.ராம்கோபால் ராவ், “ தேர்வு மையத்திற்கு செல்ல தனியார் போக்குவரத்தை ஏற்பாடு செய்ய முடியாத சூழல் உள்ளதாக சில மாணவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கடிதம் மூலமாகவும் சில மாணவர்கள் தெரிவித்தனர். எனவே, நாங்கள் உடனடியாக முன்னாள் மற்றும் மற்ற மாணவர்களிடம் கோரிக்கை வைத்தோம். மாணவர்களின் முயற்சிகளில் பாராட்டும் அதே வேளையில், ஒவ்வொரு மட்டத்திலும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நமது உள்ளார்ந்த ஆசைகளின் வெளிப்பாடாய் இதை கொண்டாடுகிறேன்” என்று தெரிவித்தார்.
ஜே.இ.இ முதன்மை தேர்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், நீட் தேர்வில் சுமார் 16 லட்சம் மாணவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil