முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று (ஜுன் 23, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில் அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு திடீரென அறிவித்தது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை நீட் தேர்வு, யு.ஜி.சி நெட் தேர்வு முறைகேடு, வினாத் தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும், சில மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் மறு தேர்வு நடைபெறுகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சில போட்டித் தேர்வுகளின் அறம் சார்ந்து எழுந்துள்ள குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வின் செயல்முறையின் தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்யும் நோக்கில் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு வருந்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“