முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக தேர்வர்களுக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கி, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுதும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை, நீட் பி.ஜி மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான நீட் பி.ஜி தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் இருந்து எம்.பி.பி.எஸ் முடித்த 25,000 பேர் உட்பட நாடு முழுவதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேர்வு முந்தைய நாள் இரவில் நீட் பி.ஜி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு, ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், தமிழக தேர்வர்களுக்கு, குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்களை தேர்வு செய்தவர்களுக்கு, அவர்கள் கேட்டிருந்த நான்கு விருப்ப தேர்வு மையங்களை ஒதுக்காமல் 750 கி.மீ., - 1000 கி.மீ., தொலைவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க கோரிக்கை வைத்தார். மேலும். தி.மு.க எம்.பி வில்சனும் தமிழக தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழகத்திலே ஒதுக்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். இதேபோன்று மற்ற மாநிலங்களின் எம்.பி.,க்களும் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தமிழகத்தில் அவர்கள் கேட்ட தேர்வு மையங்களை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தகவல், மின்னஞ்சல் வாயிலாக, தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“