/indian-express-tamil/media/media_files/2025/06/02/SDDaYEH4GLzjzKkYrQB9.jpg)
ஜூன் 15-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் வகையில், தேர்வை ஒரே ஷிஃப்டாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு தொடர்பான மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "வெளிப்படைத்தன்மை முழுமையாக பேணப்படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்பான மையங்கள் அடையாளம் காணப்பட்டு செயல்பட தொடங்குவதை கண்காணிக்காவும், நீட் முதுகலை 2025 தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில், நீட் முதுகலை 2025 தேர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு ஷிஃப்டுகளில் நடத்தப்படாது என்பதை NBEMS உறுதிப்படுத்தியுள்ளது.
நீட் முதுகலை 2025 ஒத்திவைப்பு: புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும்
நீட் முதுகலை 2025 தேர்வு, முதலில் ஜூன் 15 அன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரே ஷிஃப்டில் இடமளிக்கும் வகையில் கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்பாடு செய்யும் பணியில் NBEMS ஈடுபட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட தேர்வு தேதி natboard.edu.in மற்றும் nbe.edu.in ஆகிய அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விரைவில் அறிவிக்கப்படும்.
முன்னதாக, நீட் முதுகலை 2025 க்கான அட்வான்ஸ் சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்பை ஜூன் 2 அன்று NBEMS வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்வு ஒத்திவைப்பு காரணமாக, சிட்டி ஸ்லிப், அனுமதி அட்டை மற்றும் தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.
முதுகலை நீட் என்பது NBEMS ஆல் நடத்தப்படும் ஒரு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இது இந்தியாவில் முதுகலை மருத்துவப் படிப்புகளில் (MD/MS/PG டிப்ளோமா) சேர்வதற்கான முக்கிய தகுதித் தேர்வாக செயல்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.