இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மதுரையைச் சேர்ந்த திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மொத்தம், 497 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. அதற்காக, 3570 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் பலர் அந்த பக்கத்தில் மதிப்பெண்களை சரிபார்த்ததால் மொத்தமாக இணைய பக்கம் சில நிமிடங்கள் முடங்கியது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள இணையப் பக்கத்தில், பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். சிபிஎஸ்இ முடிவுகள் வராமல் இருந்த காரணத்தால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ முடிவுகள் வெளியே வந்ததால் தற்போது நீட் முடிவுகள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் அவர் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற தமிழ்நாடு மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடமும். தேசிய அளவில் 43வது இடமும் பெற்றுள்ளார். அதேபோல் எஸ்சி பிரிவில் தமிழ்நாடு மாணவர் பிரதாப் இந்திய அளவில் 7ம் இடம் பிடித்துள்ளார். அவர் 686 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"