தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் கடந்த ஆண்டை விட அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதால், இந்த ஆண்டு பெரும்பாலான பிரிவுகளுக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் 20 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கலாம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைகான நீட் தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். முதல் 100 இடங்களுக்குள் இதுவரை இல்லாத அளவில் அதிகமான தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, 31 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்: NEET UG 2023 Result: நீட் தேர்வு முதல் 50 இடங்களில் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆதிக்கம்
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள முடிவுகளின் படி, கடந்த ஆண்டு 199 மாணவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 386 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 500 முதல் 650 மதிப்பெண்கள் பெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 4,271 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 40% அதிகரித்து, 6,015 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 4,293 மாணவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 7,833 மாணவர்கள் 400 முதல் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தத்தில், 2022 இல் 8,763 மாணவர்களுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 14,234 மாணவர்கள் 400-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் இந்த ஆண்டு 20 மதிப்பெண்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கட்-ஆஃப் கடந்த ஆண்டு 581 மதிப்பெண்களாக இருந்தது. இந்த ஆண்டு, இது 600 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு கட்-ஆஃப் 20 முதல் 30 மதிப்பெண்கள் அதிகரிக்கலாம், என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட, சுமார் 7,000 மருத்துவ இடங்கள் உள்ளன.
அதேநேரம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் குறித்தும், புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற சிறந்த கல்லூரிகளில் சேர்க்கை பெறுவது குறித்தும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களை அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதால், இந்த மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்வார்கள் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் கடந்த ஆண்டை விட கட்-ஆஃப் குறைந்தது பத்து மதிப்பெண்கள் அதிகரிக்கலாம் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.சி பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் - 529, பி.சி.எம் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் - 504, எம்.பி.சி/டி.என்.சி பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் - 496, எஸ்.சி பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் - 407, எஸ்.சி.ஏ பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் - 355 மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் – 311 ஆக இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.