நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேரும் கனவோடு, நாளை (மே 7) 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்தநிலையில் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு (NEET UG 2023) மே 7 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர்க்கை பெற, தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த நீட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும். தகுதி மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும், விரும்பிய அல்லது சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க அதிக மதிப்பெண்கள் பெறுவது அவசியம்.
இதையும் படியுங்கள்: NEET 2023 Exam Hall Rules: 12 மணிக்கு எக்ஸாம் ஹால் ஓபன் ஆயிடும்; மறக்காம இதை எல்லாம் செக் பண்ணுங்க!
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும், இதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் சேர்க்கை பெற மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டும். எனவே மாணவர்கள் குறைந்தது 150 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க வேண்டும். தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு என்பதை கவனத்தில் கொண்டு விடையளிக்க வேண்டும்.
நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவதற்கான டிப்ஸ்
கடைசி நிமிட தயாரிப்பு
நீங்கள் பாடத்திட்டத்தை சரிபார்த்து அனைத்து தலைப்புகளையும் படித்துவிட்டோமா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். இருப்பினும் புதிய தலைப்புகளை இனி படிக்க வேண்டாம். நீங்கள் படித்தவற்றை உங்கள் மனதிற்குள் கொண்டு வந்து, திரும்ப திரும்ப சொல்லி பார்த்துக் கொள்ளுங்கள்.
திருப்புதல்
நாளை தேர்வு என்பதால், புதிய தலைப்புகளைக் கற்றுக்கொள்வதை விட ஏற்கனவே படித்தவற்றை திருப்புதல் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து சூத்திரங்கள் மற்றும் வரையறைகளை நன்றாக புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்த குறிப்புகளை மட்டும் திருப்புதல் செய்தால், குழப்பம் இல்லாமல் இருக்கும். இன்று இரவு நல்ல தூக்கம் அவசியம். எனவே இரவு முழுவதும் படிப்பதை தவிருங்கள்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வை முயற்சிக்கவும்
கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு, குறிப்பிட்ட நேரத்தில் விடையளிப்பதும் முக்கியம். ஒரு வினாவைத் தீர்ப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய மாணவர்கள் முந்தைய ஆண்டு வினாத்தாளைப் பயிற்சி செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் நீங்கள் ஏற்கனவே பயிற்சி செய்த வினாத்தாள்களை மீண்டும் வேகமாக முயற்சிச் செய்து பாருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.