NEET UG 2023: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) 2023 இன் வினாத்தாளின் மொழி தொடர்பான விளக்கத்தை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://neet.nta.nic.in/ இணையதளத்தில் கிடைக்கிறது
ஆங்கிலத்தை தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இந்தி தேர்வு செய்தவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி என இருமொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும் என்றும் NTA தெளிவுபடுத்தியுள்ளது. இதேபோல், பிராந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்: இதுவரை இல்லாத அளவில் நீட் தேர்வுக்கு 20.87 லட்சம் பேர் விண்ணப்பம்
பிராந்திய மொழிகளில் உள்ள வினாத்தாள் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் மட்டுமே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அஸ்ஸாமில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே அஸ்ஸாமி மொழியில் வினாத்தாள் இருக்கும், அதேசமயம் பஞ்சாப், சண்டிகர் மற்றும் டெல்லி/ புது டெல்லி (பரிதாபாத், காசியாபாத், குருகிராம், மீரட், நொய்டா/கிரேட்டர் நொய்டா உட்பட) தேர்வு மையங்களில் பஞ்சாபி மொழி வினாத்தாள் அனுமதிக்கப்படும்.
அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் வினாத்தாள் ஆங்கிலத்தில் கிடைக்கும், அதேசமயம் இந்தியாவில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் மட்டுமே இந்தி மற்றும் உருது மொழிகளில் வினாத்தாள் கிடைக்கும் என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும்.
மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெங்காலி மொழியில் வினாத்தாள் கிடைக்கும். குஜராத், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களில் குஜராத்தி மொழியில் வினாத்தாள் கிடைக்கும். கன்னட மொழி வினாத்தாள் கர்நாடகா தேர்வு மையங்களில் மட்டும் கிடைக்கும், மராத்தி மொழி வினாத்தாள் மகாராஷ்டிரா தேர்வு மையங்களில் மட்டும் கிடைக்கும், ஒடியா மொழி வினாத்தாள் ஒரிசா தேர்வு மையங்களில் மட்டும் கிடைக்கும்.
மலையாளம் மொழி வினாத்தாள் கேரளா மற்றும் லட்சத்தீவுகளிலும், தமிழ் மொழி வினாத்தாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளிலும் கிடைக்கும், தெலுங்கு மொழி வினாத்தாள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.