நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை முதன்முறையாக 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் 1.09 லட்சம் எம்.பி.பி.எஸ் இடங்கள், 26,000 பல் மருத்துவ இடங்கள் மற்றும் இந்திய மருத்துவ படிப்புகளான சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் மற்றும் செவிலியர் உள்ளிட்ட இடங்களுடன் சேர்த்து சுமார் 2 லட்சம் இடங்களுக்கு நீட் தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. மார்ச் 9 ஆம் தேதி கடைசி தேதி என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முதன்முறையாக நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.2 லட்சம் அதிகம். குறிப்பாக 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் மொத்தம் 11,255 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகம். இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,725 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5,500 இடங்களும் உள்ளன.
தமிழகத்திற்கு அடுத்தப்படியாக கர்நாடகாவில் 10,145 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அடுத்து மகாராஷ்டிராவில் 9,895 இடங்களும், உத்திரபிரதேசத்தில் 9,053 இடங்களும் உள்ளன. உத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 4,303 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“