நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஆண்டை விட 4 லட்சத்திற்கும் அதிகமாக, முதன்முறையாக 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் 1.09 லட்சம் எம்.பி.பி.எஸ் இடங்கள், 26,000 பல் மருத்துவ இடங்கள் மற்றும் இந்திய மருத்துவ படிப்புகளான சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் மற்றும் செவிலியர் உள்ளிட்ட இடங்களுடன் சேர்த்து சுமார் 2 லட்சம் இடங்களுக்கு நீட் தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் தொடங்கி, நேற்று (மார்ச் 9) முடிவடைந்ததது. இந்த நிலையில், முதன்முறையாக நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.2 லட்சம் அதிகம். குறிப்பாக 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கக் கோரி மாணவர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடைசி நாளில் ஏராளமான மாணவர்கள் பதிவு செய்த நிலையில், சில மாணவர்களுக்கு ஆதார் அட்டை மற்றும் மொபைல் இணைப்பு இல்லாததால் விண்ணப்பிக்க முடியவில்லை. சிலருக்கு OTP பெற முடியவில்லை. மேலும், சில மாணவர்களின் பழைய மொபைல் எண் அவர்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அதில் ஓ.டி.பி பெற முடியாமல் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“