ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வின் முதல் ஒரு மணி நேரத்திலும் கடைசி அரை மணி நேரத்திலும் பயோ-பிரேக் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மே 5-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை நேரடி முறையில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவில் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 5-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்வின் முதல் ஒரு மணி நேரத்திலும் கடைசி அரை மணி நேரத்திலும் பயோ-பிரேக் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் மற்றும் கண்காணிப்பு பணியாளர்கள் இருவருக்குமே பல-நிலை பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதால், அனைத்து நடைமுறைகளையும் முடிக்க தேர்வு மையங்களுக்கு சரியான நேரத்தில் வர வேண்டும் என்று நிறுவனம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் கூறுகையில், 24 லட்சம் தேர்வர்கள் பதிவு செய்த இந்தியாவின் மிகப்பெரிய போட்டித் தேர்வுக்கான மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளுடன் நிறுவனம் தயாராகி வருகிறது.
பயோ-பிரேக்குகளை தடை செய்தல், நேரம் தவறாமை, முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள், பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் உடன் நேர்மையை நிலைநிறுத்துதல், எதிர்கால தேர்வு ஒழுங்கு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது என, தேசிய தேர்வு முகமை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்களை எடுத்துள்ளது, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“