தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பச் செயல்முறையை விரைவில் தொடங்கி உள்ள நிலையில், விண்ணப்பிக்க மாணவர்களுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? எந்த வகையில் வைத்திருக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தேசிய தேர்வு முகமை மே 5, 2024 அன்று நீட் நுழைவுத் தேர்வை (NEET UG 2024) நடத்துகிறது. தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் https://neet.ntaonline.in/என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப செயல்முறை தொடங்கும் போது, தேசிய தேர்வு முகமை நீட் தேர்வின் தகவல் குறிப்பேட்டையும் பதிவேற்றும். விண்ணப்பதாரர்கள் தகவல் குறிப்பேட்டை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கும் முன் தகுதி, தேர்வுத் திட்டம், விண்ணப்ப செயல்முறை மற்றும் கட்டணம் போன்ற அனைத்து முக்கிய விபரங்களையும் பார்க்க அறிவுறுத்தப்படுகிறது.
இந்தநிலையில், விண்ணப்பிக்க ஆவணங்களின் பட்டியலை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சாதிச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும்போது விபரங்களை உள்ளிட்டால் மட்டும் போதும்.
இரண்டு வகையிலான போட்டோக்களை நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். ஒன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம். இன்னொன்று அஞ்சல் அட்டை அளவு புகைப்படம். இரண்டும் 01.01.2024க்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்க வேண்டும். புகைப்படத்தின் பின்னணி வெள்ளையில் இருக்க வேண்டும். புகைப்படத்தின் கீழே உங்கள் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி இடம் பெற்றிருக்க வேண்டும். இவற்றின் அளவு 10 முதல் 200 Kbக்குள் இருக்குமாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கையொப்பம் கேப்பிடல் (CAPITAL) எழுத்துக்களில் இருக்க கூடாது. வெள்ளை தாளில் கருப்பு நிற மையில் கையெழுத்திட்டு ஸ்கேன் செய்து, 4 முதல் 30 Kbக்குள் இருக்குமாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இரண்டு கைகளில் அனைத்து விரல்களையும் மையில் வைத்து தாளில் ஒற்றி எடுத்து, ஸ்கேன் செய்து 4 முதல் 30 Kbக்குள் இருக்குமாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள விபரங்களை உள்ளிட்டால் போதும், பதிவேற்றம் செய்ய தேவையில்லை.
அடையாள அட்டைக்கு ஆதார், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் தகவல்களை உள்ளிட வேண்டும். பதிவேற்றம் செய்ய தேவையில்லை.
வினாத்தாள் மொழிக்கு தமிழை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். தமிழ் மொழியை தேர்வு செய்தால், வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காண்பிக்கப்படும். அதேநேரம் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் இடம்பெறும்.
12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை பொறுத்தவரை இந்த வருடம் தேர்வு எழுதுபவர்கள் விபரங்களை உள்ளிட வேண்டியதில்லை. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் விபரங்களை உள்ளிட வேண்டும்.
மொபைல் எண், பாஸ்வேர்டு, லாக் இன் ஐ.டி, இமெயில் ஐ.டி போன்ற தகவல்களை சரியாக உள்ளிடுவதோடு, அவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“