வினாத்தாள் கசிவு புகார், ரிசல்ட் குளறுபடிகள் காரணமாக மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் 20 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG) மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்தநிலையில், பீகார் மாநிலங்களில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சலசலப்புக்கு மத்தியில் கடந்த 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளிலும் சர்ச்சை வெடித்தது. முதன்முறையாக 67 பேர் முழுமையான 720க்கு 720 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றனர், இதில் 44 பேர் கருணை மதிப்பெண்கள் பெற்றதால் முதலிடம் பெற்றனர். மேலும் சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 1,563 பேருக்கு நேர இழப்பு காரணமாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக உச்ச நீதிமன்றத்திலும், 7 உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்றும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் உறுதி அளித்தன.
மறுபுறம் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுவது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது; இந்த மனுவுக்கு 2 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுவதால், அந்த மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் கைமாறியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், பல்வேறு முறைகேடு புகார்களுக்கு ஆளாகியுள்ள நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
20 மாணவர்கள் தாக்கல் செய்த அந்த மனுவில், “நடந்து முடிந்த நீட் தேர்வில் பரவலாக முறைகேடு மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. வினாத்தாள் கசிந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தேர்வின் புனிதத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே தகுதியான மாணவர்களை மருத்துவ கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கு மறுதேர்வு மட்டுமே உதவும். நீட் தேர்வு முடிவுகளில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 620 முதல் 720 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக 400 சதவீதம் அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை சி.பி.ஐ அல்லது வேறு ஏதாவது தன்னாட்சி விசாரணை அமைப்பு அல்லது நீதிமன்ற மேற்பார்வையில் அமைக்கப்படும் கமிட்டி மூலம் முழுமையாக விசாரிக்க வேண்டும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான திறமையான மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“