நீட் (NEET UG 2024) தேர்வுக்கான இறுதி, திருத்தப்பட்ட முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 23, 2024 அன்று, நீட் தேர்வின் திருத்தப்பட்ட இறுதி முடிவு அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். எனவே, மாணவர்கள் இன்று முடிவுகளை எதிர்பார்க்கலாம். தேசிய தேர்வு முகமை இறுதி தகுதிப் பட்டியலை அறிவித்தவுடன், தேர்வர்கள் அதை அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in இல் பார்க்கலாம்.
மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அதிக டாப்பர்கள், தேர்வு நடைமுறைகளில் குளறுபடி, மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்டவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகள் விசாரணையின் போது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றாலும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறி மறுதேர்வுக்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மற்றொரு வழக்கில், இயற்பியல் பகுதியில், ஒரு கேள்விக்கான விடையை ஐ.ஐ.டி டெல்லி நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆப்ஷன் 4 என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, இந்த விடைக்கு ஏற்ப தேர்வு முடிவுகளில் மாற்றங்களைச் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஜூலை 23, 2024 அன்று, நீட் தேர்வின் திருத்தப்பட்ட இறுதி முடிவு அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அந்த வகையில் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருத்தப்படும் தேர்வு முடிவுகள் மூலம், 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வில் 4 மதிப்பெண்களை இழக்கின்றனர். இதனால் இவர்களின் தரவரிசையிலும் மாற்றம் இருக்கும். மேலும் 44 டாப்பர்களின் மதிப்பெண்களும் 715 ஆக மாற்றியமைக்கப்படுகிறது. இவர்களின் தரவரிசையிலும் சரிவு ஏற்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“