இந்தியாவில் 8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 2 ஆம் சுற்று விண்ணப்பப் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET UG) கவுன்சிலிங் 2024 இன் இரண்டாம் சுற்றுக்கான பதிவை செப்டம்பர் 5 ஆம் தொடங்கியது. இந்த நீட் கவுன்சலிங் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களுக்கான சேர்க்கைக்கானது.
மருத்துவ கவுன்சலிங் கமிட்டியின் நீட் கவுன்சிலிங் 2 ஆம் சுற்றுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 10 வரை அனுமதிக்கப்பட்டது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் பதிவு செய்து, சீட் கிடைக்காத அல்லது ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும், விண்ணப்பப் பதிவு முடிந்து செப்டம்பர் 11 ஆம் தேதி சாய்ஸ் லாகிங் செயல்முறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சாய்ஸ் லாகிங் தொடங்கவில்லை. ஏனெனில் மாணவர்களுக்கு நற்செய்தியாக புதிதாக 8 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ கவுன்சலிங் கமிட்டி இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பப் பதிவு மற்றும் சாய்ஸ் ஃபில்லிங்கிற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை சாய்ஸ் ஃபில்லிங் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட தகவல்களுக்கு கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“