உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய தேர்வு முகமை நீட் தேர்வின் (NEET UG 2024) இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது. இந்த நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சலிங் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அதிக டாப்பர்கள், தேர்வு நடைமுறைகளில் குளறுபடி, மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்டவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நேற்றைய விசாரணையின் போது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றாலும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறி மறுதேர்வுக்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மற்றொரு வழக்கில், இயற்பியல் பகுதியில், ஒரு கேள்விக்கான விடையை ஐ.ஐ.டி டெல்லி நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆப்ஷன் 4 என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, இந்த விடைக்கு ஏற்ப தேர்வு முடிவுகளில் மாற்றங்களைச் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில், இந்த வார இறுதிக்குள் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கைகான கவுன்சலிங் அட்டவணை வெளியிடப்படும். அந்த வகையில் நீட் கவுன்சலிங் அட்டவணை இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திட்டமிடப்பட்ட மருத்துவ கவுன்சலிங் தேதிகள் வழக்குகளால் தாமதமானதால், இன்று அல்லது நாளை விண்ணப்பப் பதிவு தொடங்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நீட் கவுன்சலிங் அட்டவணை மற்றும் விண்ணப்பப் பதிவு விபரங்கள் https://mcc.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“