NEET UG 2024 Results: இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 67 பேர் முதலிடம் அல்லது 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 23,33,297 பேர் எழுதினர்.
இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று (ஜூன் 4) அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். பொதுப்பிரிவில் 3,33,932 பேரும், இ.டபிள்யூ.எஸ் பிரிவில் 1,16,229 பேரும், ஓ.பி.சி பிரிவில் 6,18,890 பேரும், எஸ்.சி பிரிவில் 1,78,738 பேரும், எஸ்.டி 68,479 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 4,120 பேரும் மருத்துவம் படிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தாண்டு 1,52,920 பேர் தேர்வெழுதியதில் 89,426 (58.47%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியை விட அதிகமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 1,44,514 பேர் தேர்வு எழுதியதில் 78,693 (54.45%) பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் அதிகரித்துள்ளது. பொதுப் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளி பிரிவினருக்கான நீட் கட்-ஆஃப் கடந்த ஆண்டு 720-137 ஆக இருந்தது. இந்த ஆண்டு 720-164 ஆக அதிகரித்துள்ளது. தாழ்த்தப்பட்ட சாதி, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, கடந்த ஆண்டு 136-107 ஆக இருந்த நீட் தேர்வு கட்-ஆஃப் இந்த ஆண்டு 163-129 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், SC, ST மற்றும் OBC பிரிவுகளின் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான நீட் தேர்வு கட் ஆஃப், கடந்த ஆண்டு 120-107 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 145-129 ஆக அதிகரித்துள்ளது.
பொதுப் பிரிவைச் சேர்ந்த மருத்துவ விண்ணப்பதாரர்களுக்கான எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) படிப்புகளுக்கான நீட் கட்-ஆஃப் 50 சதவீதம், OBC, SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 40 சதவீதம். நீட் தேர்வில் அகில இந்திய பொதுத் தகுதிப் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில் நீட் சதவீதத்தை தேசிய தேர்வு முகமை தீர்மானிக்கிறது.
நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் 8 பேர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். சையது அரிபின் யூசுப், எஸ்.சைலஜா, ஆதித்யா குமார் பண்டா, பி.ஸ்ரீராம், பி.ராஜனீஷ், எம்.ஜெயதி பூர்வஜா, ஆர்.ரோகித், எஸ்.சபரீசன் ஆகிய 8 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.