NEET UG 2024: நீட் தேர்வு தொடர்பான அடுத்த விசாரணை ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது. இந்திய தலைமை நீதிபதி டி.ஓய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தேர்வு தொடர்பான 30க்கும் மேற்பட்ட மனுக்களை இன்று விசாரித்தது.
விசாரணையின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் மே 5-ம் தேதி தேர்வு நடத்தப்படுவதற்கு இடைப்பட்ட கால அவகாசம் குறித்து தெரிவிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
(1). வினாத்தாள் கசிவு எப்போது நடந்தது, (2). வினாத்தாள்கள் கசிந்த / பரப்பப்பட்ட விதம் மற்றும் (3) வினாத்தாள் கசிவு மற்றும் உண்மையான தேர்வுக்கு இடையேயான கால அளவு ஆகியவற்றை இன்றைய தேதி வரை உள்ள தகவல்களின் அடிப்படையில் தெளிவுபடுத்துமாறு தேசிய தேர்வு முகமைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வினாத்தாள் கசிவால் பயனடைந்தவர்களை அடையாளம் காண இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்துமாறு தேசிய தேர்வு முகமை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது: (1) வினாத்தாள் கசிவு நடந்த மையங்கள்/நகரங்களை அடையாளம் காண தேசிய தேர்வு முகமை எடுத்த நடவடிக்கைகள், (2) அடையாளம் காண பின்பற்றப்பட்ட முறைகள் மற்றும் (3) இதுவரை வினாத்தாள் கசிவால் பயனடைந்ததாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை.
மேலும், சொலிசிட்டர் ஜெனரலிடம், ‘ஏற்கனவே குழு அமைக்கப்பட்டிருந்தால், அதன் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். குழுவை தொடர அனுமதிக்க வேண்டுமா அல்லது அமைப்பை மாற்ற வேண்டுமா என்பதை நீதிமன்றம் பின்னர் பரிசீலிக்கலாம்,’ என்று தலைமை நீதிபதி கூறினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வினாத்தாள் கசிவு, ஓ.எம்.ஆர் தாள் முறைகேடு, ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி போன்ற காரணங்களுக்காக தேர்வை ரத்து செய்யக் கோருவதாக தெரிவித்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “நீதிமன்றத்திற்கோ அல்லது ஒரு நிபுணருக்கோ முறைகேடுகளை அடையாளம் காண்பது சாத்தியமா... 720/720 மதிப்பெண்ணை அதிக மாணவர்கள் எடுத்த விவகாரம் ஒன்று. அனைத்து மாணவர்களும் மோசடி செய்பவர்கள் அல்ல, சிலர் நன்றாக படிக்க கூடியவர்களாக இருக்கலாம்.. 1563 மாணவர்களில் எத்தனை பேர் என்பதை நாம் பார்க்க வேண்டும்,” என்று கூறினார்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2024 கவுன்சலிங் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்ட பிறகு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, நீட் அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 6 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது.
மே 5ம் தேதி நடத்தப்பட்ட நீட் 2024 தேர்வு குறித்து பல்வேறு பயிற்சி நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், மனுதாரர்கள் வினாத்தாள் கசிவு எனக் குற்றம் சாட்டியுள்ளனர். சிலர் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் மற்றும் பலவற்றின் மீதான விசாரணையைக் கேட்டுள்ளனர்.
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்களுக்கு மறு தேர்வையும் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தியது. திருத்தப்பட்ட முடிவுகளின் மூலம், முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 61 ஆகக் குறைந்துள்ளது, ஏனெனில் தேர்வர்களில் ஆறு பேர் மறுதேர்வில் முழு மதிப்பெண்களை பெறத் தவறினர். முன்னதாக தேர்வு நேரம் தவறியதால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட பிறகு அவர்களின் மதிப்பெண் 720/720 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர்கள் மறுதேர்வில் 680க்கு மேல் அதிக மதிப்பெண்களை மீண்டும் பெற்றனர்.
இதற்கிடையில், கல்வி அமைச்சகம், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நீட் தேர்வு நடத்தும் போது "முறைகேடுகள், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம், மோசடிகள்" நடந்ததாக ஒப்புக்கொண்டது. இருப்பினும், வினாத்தாள் கசிவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. "இந்தியாவில் நடத்தப்படும் தேர்வில் பெரிய அளவிலான ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது" என்று மத்திய அரசு கூறுகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுஷ் மற்றும் பிற தொடர்புடைய படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு 2024 மே 5 அன்று 4,750 மையங்களில் நடத்தப்பட்டது மற்றும் சுமார் 24 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.