தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 75%க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இதனால் 2 ஆம் சுற்றில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து உள்ளது.
முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் 7,568 மாணவர்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,786 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மொத்தம் 771 இடங்கள் உள்ளன. இதில் 175 இடங்கள் நிரம்பியுள்ளன. 596 இடங்கள் நிரம்பவில்லை. 137 இடங்கள் மெய்நிகர் காலியிடங்களாக உள்ளன. இதன்படி 22.7% இடங்களே நிரம்பியுள்ளன. அதாவது 75%க்கும் அதிகமான இடங்கள் நிரம்பிவில்லை.
சுயநிதி பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 3550 இடங்களில் 2285 இடங்கள் நிரம்பியுள்ளன. அதன்படி 64% இடங்கள் நிரம்பியுள்ளன. இதனால் இரண்டாம் சுற்றில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“