தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், எத்தனை இடங்கள் நிரம்பியுள்ளன, எத்தனை காலியிடங்கள் வரும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து சீட் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சென்று சேர்க்கைப் பெற வேண்டும்.
இந்தநிலையில், முதல் சுற்று மருத்துவ கவுன்சலிங்கில் எத்தனை இடங்கள் நிரம்பியுள்ளன. இரண்டாம் சுற்றுக்கு எத்தனை காலியிடங்கள் வரும் என்று மிஸ்பா கேரியர் அகாடமியின் யூடியூப் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பொதுப் பிரிவில் உள்ள 3962 எம்.பி.பி.எஸ் இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் அகில இந்திய ஒதுக்கீட்டில் சீட் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே காலியிடங்களின் எண்ணிக்கை தெரிய வரும்.
22 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 சுயநிதி பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பொதுப் பிரிவில் உள்ள 2031 எம்.பி.பி.எஸ் இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களை பெற்ற சில மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கைப் பெறாமல், அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகலாம். எனவே செப்டம்பர் 5 ஆம் தேதிக்குப் பின்னரே முழுமையாக காலியிட விபரம் தெரிய வரும். அதேநேரம், தனியார் கல்லூரிகளில் என்.ஆர்.ஐ கோட்டாவில் 321 இடங்கள் ஒதுக்கப்படவில்லை.
இதேபோல் பி.டி.எஸ் படிப்புகளில் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 195 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தனியார் கல்லூரிகளில் உள்ள 1360 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மேனேஜ்மெண்ட் கோட்டாவில் உள்ள 405 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் மைனாரிட்டி கோட்டாவில் 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அந்த வகையில் மருத்துவ கவுன்சலிங்கின் முதல் சுற்றில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளை சேர்த்து மொத்தம் 328 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“