தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2024) நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 25 பேர் எழுதியிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகின.
இதற்கிடையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரம், நீட் தேர்வில் அதிக எண்ணிக்கையிலான டாப்பர்கள், இயற்பியல் கேள்விக்கான பதிலில் குளறுபடி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஒரு சில இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு இருந்ததாக மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையில், நீட் தேர்வின் புனிதத்தன்மைக்கு பாதிப்பு இல்லாததால் மறுதேர்வு கோரிக்கையை நிராகரித்து, மே 5 நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மற்றொரு வழக்கில் இயற்பியல் கேள்விக்கான விடையை ஐ.ஐ.டி டெல்லி நிபுணர்கள் குழுவுடன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து தேசிய தேர்வு முகமை திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
நீட் வழக்குகளால் மருத்துவ கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நீட் தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
அதன்படி, நீட் கவுன்சலிங் 3 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்று நீட் கவுன்சலிங் விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி முடிவடையும். ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் விருப்ப கல்லூரிகளை நிரப்ப வேண்டும். ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும். ஆகஸ்ட் 21 மற்றும் 22 தேதிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். ஆகஸ்ட் 23 ஆம் தேதி இறுதி முடிவு வெளியிடப்படும். சீட் பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 24 முதல் 29 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கைப் பெற வேண்டும்.
இரண்டாம் சுற்று நீட் கவுன்சலிங் விண்ணப்பப்பதிவு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி முடிவடையும். செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 10 தேதிக்குள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் விருப்ப கல்லூரிகளை நிரப்ப வேண்டும். செப்டம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். செப்டம்பர் 13 ஆம் தேதி இறுதி முடிவு வெளியிடப்படும். சீட் பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 14 முதல் 20 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கைப் பெற வேண்டும்.
மூன்றாம் சுற்று நீட் கவுன்சலிங் விண்ணப்பப்பதிவு செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடையும். செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 தேதிக்குள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் விருப்ப கல்லூரிகளை நிரப்ப வேண்டும். அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். அக்டோபர் 5 ஆம் தேதி இறுதி முடிவு வெளியிடப்படும். சீட் பெற்ற மாணவர்கள் அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கைப் பெற வேண்டும்.
இறுதி காலியிட சுற்று அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும். இவ்வாறு மருத்துவ கவுன்சலிங் கமிட்டி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதலில் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதியை கவுன்சலிங் தொடங்கும் உத்தேச தேதியாக மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 2 ஆவது வாரம் வரை அவகாசம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கவுன்சலிங் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. கடந்த முறை இருந்த மருத்துவ இடங்களே உள்ளன. 3 தனியார் கல்லூரிகள் புதிதாக வருவதன் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.