வினாத்தாள் கசிவு குறித்த செய்திகளுக்கு மத்தியில், மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் ஆயுஷ் மற்றும் பிற தொடர்புடைய படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) எனப்படும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை எந்த ஒரு வினாத்தாள் கசிவு குறித்து வெளிவரும் சமூக ஊடக பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. மேலும், ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் தரப்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், புதிய தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டுதலைக் கோரியதோடு, வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வின் புனிதத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. வினாத்தாள் கசிவு என்று கூறப்படுவது அரசியலமைப்பின் கீழ் உள்ள பிரிவு 14 (சமத்துவத்திற்கான உரிமை) ஐ மீறுவதாகும், ஏனெனில் இது நியாயமான முறையில் தேர்வை முயற்சிக்கும் மற்றவர்களை விட சில வேட்பாளர்களுக்கு தேவையற்ற நன்மையை அளித்தது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் உஷா நந்தினி மூலம் ஜூன் 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனு, இந்த வாரம் விடுமுறை பெஞ்ச் முன் பட்டியலிடப்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“