NEET UG 2025: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இந்த சிக்கல்கள் வரலாம்; கவனமாக இருங்க!
NEET UG 2025: நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்பவரா? டாகுமெண்ட் அப்லோடு செய்யும் போது இந்த சிக்கல்கள் வரலாம்; விண்ணப்பத்தை சரியாக செய்வது எப்படி? விளக்கம் இங்கே
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆவணங்கள் தேசிய தேர்வு முகமை குறிப்பிட்ட அளவில் இல்லையென்றால் பதிவேற்றம் செய்வது கடினம். எனவே சரியான அளவில் வைத்துக் கொள்வது சிறந்தது.
Advertisment
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை படிக்க தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மார்ச் 7 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.
நீட் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில மாணவர்களுக்கு விண்ணப்பம் செய்வதில் சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும்போது, கையொப்பம் தெளிவாக இல்லை என்றால் நிராகரிக்கப்படுகிறது. மேலும் தேசிய தேர்வு முகமை குறிப்பிட்டுள்ள சரியான அளவுகளுக்குள் இல்லை என்றாலும் நிராகரிக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
எனவே கையொப்பத்தை ஒரு தாளில் எழுதி, அதை அப்படியே ஸ்கேன் செய்து பதிவேற்றினால் சிக்கல் ஏற்படும். நீங்கள் அளவை கூடுதலாகவோ குறைவாகவோ மாற்றினாலும் நிராகரிக்கப்படும். இதற்கு சிறிய தாளில் கையொப்பமிட்டு அதை ஸ்கேன் செய்துக் கொள்ள வேண்டும். அல்லது கையொப்பமிட்ட பகுதியை மட்டும் கட் செய்து சரியான அளவுகளுடன் பதிவேற்ற வேண்டும்.
இதற்கிடையில், இதுபோன்ற பிரச்சனைகளுடன் நீண்ட நேரம் விண்ணப்பித்துக் கொண்டிருந்தால், நேரம் முடிந்து அதாவது டைம் அவுட் ஆகி வெளியே வந்துவிடுகிறது. எனவே மீண்டும் லாக் இன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
அடுத்ததாக 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 10 ஆம் வகுப்பு சான்றிதழ் இரண்டும் ஒன்றும் தான். எனவே ஒரே சான்றிதழை இரண்டு முறை பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் பதிவேற்றம் முழுமையடையும்.
அடுத்து மின்னஞ்சல் சரிப்பார்ப்பின் போது, மின்னஞ்சலை கொடுத்து, கேப்சா கொடுத்து, ஓ.டி.பி கோரிக்கை கொடுத்தால் தான் மெயிலுக்கு ஓ.டி.பி வரும். மின்னஞ்சல் மட்டும் கொடுத்தால் ஓ.டி.பி வராது. ஓ.டி.பி வந்த பின்னர் அதனை உள்ளிட்டு விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.