தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) முதல் சுற்று கவுன்சிலிங்கிற்கு எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) சேர்க்கைக்கான சீட் மேட்ரிக்ஸை மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) வெளியிட்டுள்ளது. சீட் மேட்ரிக்ஸை மாணவர்கள் mcc.nic.in என்ற இணையதளப் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
இந்த ஆண்டு, மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் உட்பட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங்கிற்கு நான்கு சுற்றுகளை மருத்துவ கவுன்சலிங் கமிட்டி நடத்துகிறது - சுற்று 1, சுற்று 2, சுற்று 3 மற்றும் ஒரு காலியிட சுற்று.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 12.36 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் பிற மருத்துவக் கல்லூரிகளில் 1,15,900 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு போட்டியிடுவார்கள். எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 10 பேரில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான (AIQ) நீட் கவுன்சிலிங் சீட் மேட்ரிக்ஸில் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் படிப்பை வழங்கும் மொத்தம் 775 மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன, இந்த நிறுவனங்கள் நிர்வாக வகையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள் பட்டியலில் இருந்தாலும், 32 தனியார் கல்லூரிகள், 13 அரசு (சமூகம்) கல்லூரிகள், 44 சமூகத்தால் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகள் எம்.பி.பி.எஸ் படிப்புகளை வழங்குகின்றன.
மேலும், ஏழு மருத்துவக் கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்கள் இல்லை. இவற்றில் காயத்ரி வித்யா பரிஷத் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் கேர் அண்ட் மெடிக்கல் டெக்னாலஜி, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் (சமூகம்); ஸ்ரீ ராவத்புரா சர்க்கார் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், ராய்ப்பூர், சத்தீஸ்கர் (டிரஸ்ட்); ஹம்தார்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், குரு ரவிதாஸ் மார்க், டெல்லி (சமூகம்); சுவாமிநாராயண் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், கலோல், காந்திநகர், குஜராத் (டிரஸ்ட்); ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, பெல்காம், கர்நாடகா (டிரஸ்ட்); இன்டெக்ஸ் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர், இந்தூர், மத்தியப் பிரதேசம் (டிரஸ்ட்); கீதாஞ்சலி மருத்துவக் கல்லூரி அண்ட் மருத்துவமனை, உதய்பூர், ராஜஸ்தான் (டிரஸ்ட்); ஃபாதர் கொலம்போ இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், வாரங்கல் (டிரஸ்ட்) உத்தரப் பிரதேசம் மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், மீரட் (சமூகம்) ஆகியவை அடங்கும்.
முதல் சுற்றுக்கான நீட் கவுன்சலிங் சீட் ஒதுக்கீடு முடிவுகள் ஜூலை 31, 2025 அன்று அறிவிக்கப்படும். முடிவுகள் வெளியானதும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 6, 2025 வரை அந்தந்த நிறுவனங்களில் சென்று சேர்க்கை பெற வேண்டும். இறுதியாக, நிறுவனங்களின் தரவு சரிபார்ப்பு ஆகஸ்ட் 7 முதல் 8, 2025 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களும் கல்லூரிகளும் பரிந்துரைக்கப்பட்ட நேர அட்டவணையை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அறிவிப்பு மேலும் அறிவுறுத்தியுள்ளது. கவுன்சிலிங் செயல்முறையை நடத்துவதற்குக் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட நேரத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து நிறுவனங்கள்/ கல்லூரிகளும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை வழக்கமான வேலை நாட்களாகக் கருதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.