எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பி.டி.எஸ். படிப்பை பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 29 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 25) வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது;
மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 30 ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 4,281 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 4,062 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் 655 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளார். 653 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த ஹிருதிக் விஜயராஜா 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
திருவள்ளூர் மாணவர் ராகேஷ் 4 ஆவது இடம், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 5 ஆவது இடம்; விருதுநகர் மாணவர் நிதின் பாபு 6 ஆவது இடம், சென்னை மாணவர் கைலேஷ் கிரண் 7 ஆவது இடம், சென்னை மாணவர் நிதின் கார்த்திக் 8 ஆவது இடம், தருமபுரி மாணவர் பிரகதீஷ் சந்திரசேகர் 9 ஆவது இடம், தேனியைச் சேர்ந்த மாணவி பொன் ஷரினி 10 ஆவது இடம் பிடித்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ் அளித்த 25 பேர் தரவரிசைப் பட்டியலிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.