நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில், எத்தனை லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன? கட் ஆஃப் குறையுமா? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை படிக்க தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது கடந்த ஆண்டு 24 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகிய நிலையில், இந்த ஆண்டு 23 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களே வந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (மார்ச் 11) முடிவடைகிறது. எனவே இனி வரும் நாட்களில் தேசிய தேர்வு முகமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிடலாம்.
இருப்பினும் தற்போதைய தகவல்களின்படி 23 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது கடந்த ஆண்டை விட குறைவாகும். எனவே கட் ஆஃப் குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையை விட, வினாத்தாளின் சிரமநிலை, மாணவர்களின் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலே கட் ஆஃப் இருக்கும். தேர்வு இன்னும் நடைபெறாததால் கட் ஆஃப் குறையுமா என்பதை இப்போது சொல்ல முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.