நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆடைக் கட்டுபாடுகள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நீட் தேர்வுக்கு மாணவர்கள் சில ஆடைக் கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமென தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, சாதாரண கண்ணாடி அணிந்து செல்லலாம். ஆண்கள் அரைக்கை சட்டை அல்லது டி-சர்ட் அணிந்து செல்லலாம். டி-சர்ட்டில் எதுவும் பிரிண்ட் செய்து இருக்க கூடாது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பாக்கெட்கள் இருந்தால் அனுமதிக்கப்படாது. சாதாரண பேண்ட், டிராக் பேண்ட் அணிந்து செல்லலாம். பெரிய பட்டன் மற்றும் அதிகமான பாக்கெட்கள் இருக்க கூடாது.
பெண்கள் அரைக்கை டாப்ஸ் அணிந்து செல்லலாம். ஷால் அணிந்து செல்ல முடியாது. டி-சர்ட், லெக்கிங், சாதாரண பேண்ட், டிராக் பேண்ட் போன்றவை அனுமதிக்கப்படும்.
சாதாரண செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூ போன்ற, மூடிய செருப்புகள் அனுமதிக்கபடாது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
பர்ஸ் அல்லது வாலட், ஹேர்பின், கைக் கடிகாரம், தோடு, கூலிங் கிளாஸ், தொப்பி, ஸ்மார்ட் பேண்ட், பாசி, செயின், ஷூ, ஹீல்ஸ் போன்றவை அனுமதிக்கப்படாது. உடலில் ஆபரணங்கள் எதுவும் அணிந்து செல்ல அனுமதிக்கப்படாது. அவசியமான, மதரீதியான ஆபரணங்கள், உடைகள் அணிந்து செல்ல வேண்டும் என்றால், 12.30க்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், தொலைபேசி, ஹெட்போன், இயர்போன், பேனா, கால்குலேட்டர், குறிப்பேடு, பெல்ட், ஹேண்ட் பேக், உணவு, வாட்டர் பாட்டில், பென்சில், புத்தகம் போன்ற எவற்றிற்கும் தேர்வு மையத்தில் அனுமதி கிடையாது.