/indian-express-tamil/media/media_files/2025/10/12/neet-ug-2025-2025-10-12-11-31-56.jpg)
மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்: புதிதாக 9,075 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு என்.எம்.சி அனுமதி!
தேசிய மருத்துவ ஆணையம் (NMC), 2025–26ம் கல்வியாண்டுக்கான நீட் யுஜி (NEET UG) மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை (Seat Matrix) திருத்தியமைத்து வெளியிட்டுள்ளது. அக்.10 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 600 எம்.பி.பி.எஸ். (MBBS) இடங்கள் தற்போது உள்ளன. இதில் ஏற்கெனவே இருந்த இடங்களின் புதுப்பித்தல் மற்றும் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் ஆகியவை அடங்கும்.
புதிய இடங்கள்: 2025-26 கல்வியாண்டில், எய்ம்ஸ் (AIIMS), ஜிப்மர் (JIPMER) மருத்துவக் கல்லூரிகளைத் தவிர்த்து, நாடு முழுவதும் மொத்தம் 9 ஆயிரத்து 75 புதிய எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில், நந்தியாலில் உள்ள சாந்திராம் மருத்துவக் கல்லூரியில் இடங்களின் எண்ணிக்கை 150-லிருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், அண்ணா கௌரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 150 இடங்களுடன் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக, டெல்லியில் உள்ள ஹம்தார்த் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அதன் இட எண்ணிக்கையில் 150 இடங்களைக் குறைத்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நீட் யுஜி 2025-க்கான இடங்களின் எண்ணிக்கையானது, ஆண்டு முழுவதும் பலமுறை திருத்தங்களுக்கு உள்ளானது. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) செப்டம்பரில் 6 ஆயிரத்து 850 இடங்களை சேர்த்தது. அதே சமயம், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள், அனுமதி தாமதம், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் இடங்கள் போன்ற காரணங்களால் 1,056-க்கும் மேற்பட்ட இடங்களை நீக்கியது.
சுமார் 10 நாட்களுக்குப் பிறகு, மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டத்தின் (Centrally Sponsored Scheme -CSS) 3-ம் கட்ட விரிவாக்கத்தின் கீழ் 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இடங்களின் எண்ணிக்கை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இதில் புதிதாக 7 ஆயிரத்து 375 இடங்கள் சேர்க்கப்பட்டன, அதே சமயம் 456 இடங்கள் குறைக்கப்பட்டன.
இதே காலகட்டத்தில், மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC), நீட் யுஜி 3-ம் கட்ட கலந்தாய்வுக்கான இடங்களைத் தேர்வு செய்யும் (Choice-Filling) காலக்கெடுவை அக்.13 வரை நீட்டித்துள்ளது. விருப்பங்களைத் தேர்வு செய்யாத விண்ணப்பதாரர்கள் mcc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள். மூன்றாம் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் அக்டோபர் 15 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை கவனமாகப் பார்த்து, அதற்கேற்பப் புதிய கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.