தேசிய தேர்வு முகமை (NTA) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2025 தேர்வுக்கான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. NEET UG அறிவிப்பு வெளியானதும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் — neet.nta.nic.in.
கூடுதலாக, நீட் தேர்வு விண்ணப்பத்திற்கான தேதிகள், தகுதி மற்றும் தேர்வு தேதிகளையும் தேசிய தேர்வு முகமை அறிவிக்கும். நீட் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த காலங்களில் பிப்ரவரி முதல் 2 வாரங்களில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு பேனா மற்றும் காகித முறையில் நடத்தப்படும். நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு மத்தியிலும் நீட் தேர்வை பேனா மற்றும் பேப்பர் முறையில் நடத்த அரசாங்கம் விரும்பியதற்கு தளவாடங்கள் ஒரு பெரிய காரணம்.
இதற்கிடையில், நீட் தேர்வில் பிரிவு B இல் உள்ள விருப்பத்தேர்வுக் கேள்விகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு எந்த விருப்பக் கேள்விகளும் இருக்காது, மேலும் கோவிட் சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கூடுதல் நேரமும் மாற்றப்படுகிறது. அந்த வகையில் நீட் தேர்வு இப்போது கோவிட்-க்கு முந்தைய வடிவத்திற்குத் திரும்புகிறது. அதாவது நீட் தேர்வு 180 வினாக்களுக்கு நடைபெறும். தேர்வுகள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வுக்கான கால அளவு 3 மணி 20 நிமிடங்களிலிருந்து 3 மணி நேரமாக மாற்றப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், நீட் தேர்வு மே 5 ஆம் தேதியும், 2023 ஆம் ஆண்டில் மே 7 ஆம் தேதியும் நடத்தப்பட்டது.