/indian-express-tamil/media/media_files/2025/07/02/top-countries-and-fmge-realities-2025-07-02-08-04-31.jpg)
வெளிநாட்டில் மருத்துவம்: இந்திய மாணவர்களின் கனவும், FMGE சவாலும்!
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி சர்வதேச மருத்துவர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள், சமூகத்தில் மருத்துவர்களின் இன்றியமையாத பங்கை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. இந்தியாவில், 2025-ஆம் ஆண்டில் நீட் இளங்கலை (NEET UG) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தைத் தாண்டியது. இந்நிலையில், மருத்துவர்கள் தினம் என்பது வெள்ளை அங்கியணியும் கனவில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு நினைவூட்டலாகவும் அமைகிறது. உள்நாட்டில் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அவர்களால் மருத்துவ சீட் பெற முடிவதில்லை.
நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், போட்டி நிறைந்த மதிப்பெண்களைப் பெற்ற தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பலர் சேர்க்கை பெற முடியாமல் போகின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு, வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது மாற்று வழியைத் தாண்டி, ஒரு முக்கிய வாய்ப்பாக மாறியுள்ளது. இந்திய மாணவர்கள் ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா போன்ற நாடுகளுக்கும், மேலும் பிரபலமான வெளிநாட்டு கல்வி மையங்களான கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் மருத்துவக் கல்விக்காகப் புலம்பெயர்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பலதரப்பட்ட கல்விப் பிரிவுகளுக்கு மாணவர்களை ஈர்த்தாலும், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களில் கணிசமானோர் குறிப்பாக எம்.பி.பி.எஸ்.-க்கு இணையான படிப்புகளைத் தொடரவே செல்கின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் குறித்த சமீபத்திய தரவுகளை வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ளது. இந்தத் தரவுகளின்படி, ஜனவரி 1, 2024 நிலவரப்படி, 11.6 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மருத்துவம் தவிர அனைத்துப் பாடப் பிரிவுகளையும் உள்ளடக்கியிருந்தாலும், இந்தியர்களின் வெளிநாட்டுக் கல்வி ஆர்வத்தைப் பற்றிய தெளிவான பார்வையை அளிக்கிறது.
2019 முதல் இந்திய மாணவர்கள் அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியல்:
கனடா முதலிடத்தில் உள்ளது. இங்கு 4.27 லட்சம் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் முதுகலை மற்றும் டிப்ளமோ திட்டங்களில் படிக்கின்றனர். அடுத்து அமெரிக்கா, இங்கு 3.37 லட்சம் இந்திய மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்முறை படிப்புகளைப் பயின்று வருகின்றனர். பிரிட்டன் (UK) 1.85 லட்சம் இந்திய மாணவர்களைக் கொண்டுள்ளது. அங்கு எளிதாக்கப்பட்ட படிப்புக்குப் பிந்தைய பணி விசாக்கள் இதற்கு முக்கிய காரணம். ஆஸ்திரேலியா 1.22 லட்சம் இந்திய மாணவர்களை ஈர்த்துள்ளது. ஜெர்மனியில் சுமார் 42,997 இந்திய மாணவர்களும், ரஷ்யாவில் 24,940 இந்திய மாணவர்களும் படித்து வருகின்றனர்.
கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) போன்ற பரந்த கல்விப் பிரிவுகளுக்குப் பிரபலமானவை. அதே சமயம், ரஷ்யா மற்றும் உக்ரைன் (முன்பு) போன்ற நாடுகள், குறைந்த கல்விக் கட்டணம், நீட் (NEET) தகுதி நிபந்தனைகளுக்கு எளிதாக இணங்குதல் காரணமாக, மருத்துவப் படிப்புக்கு விருப்பமுள்ள மாணவர்களிடையே முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன.
இந்திய மருத்துவ மாணவர்கள் படையெடுக்கும் முன்னணி கல்வி மையங்கள்:
கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் நகர்வுகளைப் பார்க்கும்போது சில சுவாரஸ்யமான போக்குகள் வெளிப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில், கனடா மற்றும் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் சேர்க்கை சீராக அதிகரித்துள்ளது. இருப்பினும், புவிசார் அரசியல் ஸ்திரமின்மை இருந்தபோதிலும், ரஷ்யா குறைந்த கல்விக் கட்டணம் மற்றும் கலாச்சார ஆதரவு காரணமாக மருத்துவப் படிப்பு விரும்பிகளிடையே அதன் பிரபலத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. உதாரணமாக, ரஷ்யாவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2019-ல் 12,500-க்கும் சற்று அதிகமாக இருந்த நிலையில், 2023-ல் 25,000 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், ஒரு காலத்தில் முன்னணி மருத்துவக் கல்வி மையமாக இருந்த உக்ரைன், 2022 போர் தொடங்கியதில் இருந்து மாணவர் சேர்க்கையில் குறைவைக் கண்டுள்ளது. மாணவர்கள் இப்போது ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை வளர்ந்து வரும் மருத்துவ மையங்களாகத் தேர்வு செய்து வருகின்றனர். இந்த நாடுகள் ஆங்கில வழிக் கற்பித்தலையும், குறைவான செலவிலான எம்.பி.பி.எஸ். (MBBS) திட்டங்களையும் வழங்குகின்றன. பொதுவாக, முழுப் படிப்புக்கான கட்டணம் ரூ.15 முதல் ரூ.35 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது
மருத்துவர்களாக இந்தியா திரும்பியோர் எத்தனை பேர்?
வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது சுலபமான தீர்வாகத் தோன்றினாலும், இந்தியா திரும்பி சட்டப்பூர்வமாகப் பயிற்சி செய்வது தானாக நடந்துவிடுவதில்லை. வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வரும் இந்தியப் பட்டதாரிகள் அனைவரும் தேசிய தேர்வு வாரியத்தால் (National Board of Examinations - NBE) நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு (Foreign Medical Graduate Examination - FMGE) எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு, இந்திய மருத்துவக் கவுன்சிலின் கீழ் தற்காலிக (அ) நிரந்தரப் பதிவுக்கான பரிசோதனையாக செயல்படுகிறது.
FMGE 2024 தேர்வு முடிவுகள், வெளிநாட்டு மருத்துவப் படிப்புகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு பெரியது என்பதை காட்டுகிறது. FMGE 2024 தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சில முக்கிய நாடுகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
இந்த எண்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமல்லாமல், இந்தியாவில் ஒரு உரிமம் பெற்ற மருத்துவராக மாறுவதற்கான சவாலான பாதையையும் பிரதிபலிக்கின்றன. முக்கியமாக, FMGE 2024 தேர்வில் பங்கேற்ற மொத்த 79,000 பேரில், வெறும் 20,382 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். இது 25.8% என்ற மிகக் குறைவான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. வெளிநாட்டில் பட்டம் பெற்ற போதிலும், பல மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் திணறுவதை இது காட்டுகிறது.
ஒரு மாணவரின் தேர்வு எதைச் சார்ந்தது?
மருத்துவப் பட்டத்தின் மீதான மோகம் மற்றும் இந்தியாவில் குறைந்த இடங்கள் இருப்பதால், மாணவர்கள் செலவு, மொழி, கலாசார பொருத்தம், FMGE (Foreign Medical Graduates Examination) தேர்வு வெற்றி விகிதங்கள் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிந்தைய வழிகள் போன்ற காரணிகளை எடைபோடுகின்றனர். வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகள் இந்தியத் தரநிலைகளுடன் பாடத்திட்ட ஒற்றுமை கொண்டிருப்பதால், FMGE முடிவுகள் சற்று சிறப்பாக இருப்பதற்கு அவை விரும்பப்படுகின்றன. இதற்கு மாறாக, சீனா மற்றும் கிர்கிஸ்தான் போன்ற இடங்கள், கலவையான தேர்வு செயல்திறன் தரவுகள் இருந்தபோதிலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை ஈர்க்கின்றன.
ரஷ்யாவில் உள்ள ஒரு முன்னணி மருத்துவ நிறுவனத்தின் துணைவேந்தருடன் நடந்த கலந்துரையாடலில், ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் தொடர்ச்சியான ஆர்வம், நீண்டகால இருதரப்பு உறவுகள், செலவு நன்மைகள் மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றால் உந்தப்படுகிறது என்பதை indianexpress.com அறிந்து கொண்டது. ரஷ்ய எம்பிபிஎஸ் (MBBS) படிப்புகள் ரூ.18 முதல் ரூ.45 லட்சம் வரை செலவாகும். இது இந்தியாவின் பெரும்பாலான தனியார் மருத்துவ நிறுவனங்களை விட கணிசமாகக் குறைவு என்பதால், மலிவு விலைக் காரணி தனித்து நிற்கிறது. கூடுதலாக, பல்கலை. இந்திய மாணவர்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட வசதிகளை வழங்குகின்றன. இதில் பாலின வாரியான விடுதிகள், இந்திய உணவு மற்றும் கலாச்சார ஆதரவுப் பிரிவுகள் ஆகியவை அடங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.