நீட் கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டிய கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்துள்ளது.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET-UG 2023) முடிவுகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 11.4 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதனையடுத்து, நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: டாப் கல்லூரிகளில் 70% எம்.பி.பி.எஸ் சீட்கள் இந்த 8 மாநில மாணவர்களுக்கு; இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இருக்கிறதா?
இந்தநிலையில் தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகளை முடிப்பதற்கான கடைசி தேதியை அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டதாரி மருத்துவ கல்வி விதிமுறைகளின் படி, இளங்கலை மருத்துவ கல்வி வாரியத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு பிறகு சேர்க்கை நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பட்டதாரி மருத்துவ கல்வி விதிமுறைகளின் படி ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் சேர்க்கைகள் ரத்துச் செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் தொற்றுநோய்க்கு முந்தைய கல்லூரி சேர்க்கை நடைமுறைகளை மீண்டும் கொண்டு வருகிறது.
இதற்கிடையில் நீட் கவுன்சிலிங் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது மருத்துவ ஆணையத்தின் அறிவிப்புக்கு ஏற்ப ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் நீட் கவுன்சிலிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. எனவே நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் கவுன்சிலிங்க்கு விண்ணப்பிக்க தயாராகிக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil