/indian-express-tamil/media/media_files/2025/05/04/E2Mp5LIIhDFsMWRSYk3g.jpg)
கணினி வழித் தேர்வுகள்: கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? மத்திய கல்வி அமைச்சகம் ஆய்வு
மத்திய கல்வி அமைச்சகம், கணினி வழித் தேர்வுகளுக்கான (CBT) உள்கட்டமைப்பு குறித்த தரவுகளை ஆய்வு செய்து வருகிறது. கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் இத்தகைய தேர்வுகளால் பாதகமான சூழலை எதிர்கொள்வார்களா? என்பதை கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே கணினி வழித் தேர்வுகளாக நடத்தப்படும் தேர்வுகளும் இந்த ஆய்வில் பரிசீலிக்கப்படுகின்றன.
குழுவின் பரிந்துரைகள்
கடந்தாண்டு, நீட் இளங்கலை (NEET UG) வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைச்சகம் அமைத்தது. இந்த குழு, நுழைவுத் தேர்வுகள் சாத்தியமான இடங்களில் எல்லாம் கணினி வழியில் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், கணினி வழித் தேர்வுகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த, கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்களுடன் இணைந்து செயல்படவும் அக்குழு பரிந்துரைத்தது.
அமைச்சகத்தின் நிலைப்பாடு
மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணினி வழித் தேர்வுகளுக்கான மையங்களின் இருப்பு உறுதி செய்யப்பட வேண்டும். நுழைவுத் தேர்வுகள் முழுமையாக கணினி வழி முறைக்கு மாற்றப்பட்டால், கிராமப்புற (அ) தொலைதூரப் பகுதி மாணவர்களுக்கு எந்தவிதமான தடையும் ஏற்படாமல் இருக்க வேண்டும்" என்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த அம்சங்களை ஆய்வு செய்ய, அமைச்சகம் கணினி வழித் தேர்வுகளுக்கான உள்கட்டமைப்பு தரவுகளை ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக, ஏற்கனவே கணினி வழியில் நடத்தப்படும் ஜே.இ.இ (JEE) போன்ற தேர்வுகளின் தரவுகளை ஆய்வு செய்து, கிராமப்புற மாணவர்களின் மீதான அதன் தாக்கத்தை கண்டறிய முயற்சிக்கிறது. ஜே.இ.இ மெயின் தேர்வின் முதல் அமர்வுக்கு 12.58 லட்சம் மாணவர்களும், 2வது அமர்வுக்கு 9.92 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு, 22.09 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நீட் இளங்கலை தேர்வு, பேனா மற்றும் காகித முறையில் நடத்தப்பட்டது. 10.72 லட்சம் மாணவர்கள் எழுதிய சி.யு.இ.டி (CUET UG) கணினி வழித் தேர்வில் சில மையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. நீட் இளங்கலை தேர்வு கணினி வழிக்கு மாற்றப்படுவது குறித்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பயிற்சி மையங்கள் குறித்த ஆய்வு
இதற்கிடையில், மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்து இருப்பதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, மற்றொரு குழுவை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த புதிய குழு, போட்டித் தேர்வுகளின் "திறன் மற்றும் நேர்மையை" ஆராயவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இக்குழு, 12ஆம் வகுப்புக்குப் பிறகு நடைபெறும் நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள் தரவுகளை ஆய்வு செய்து, அவற்றின் கடினத்தன்மைக்கும் மாணவர்களின் 12ஆம் வகுப்பு கற்றல் நிலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கண்டறியும். "சில நுழைவுத் தேர்வுகளை பயிற்சி வகுப்புகள் இல்லாமல் எழுத முடியாது என்ற உணர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே உள்ளது. அது உண்மையா என்பதை தரவு பகுப்பாய்வு மூலம் சரிபார்க்கிறோம். வேறுபாடு இருந்தால், அதை சரிசெய்வது குறித்து ஆராய வேண்டும்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.