NEET UG exam 2022 How to read NCERT books and preparation tips: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) தேர்வு ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எவ்வாறு தயாராகுவது என்பதை இப்போது பார்ப்போம்.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. இதில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் யூஜி தேர்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. டாக்டர் கனவுடன் இருக்கும் மாணவர்களின் கனவை நனவாக்க இந்த நீட் தேர்வு தான் உதவுகிறது.
இந்தநிலையில், நீட் தேர்வில் பெரும்பாலான வினாக்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் (NCERT) புத்தகங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. ஆனால், மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்களை எவ்வாறு படிப்பது? எப்படி தேர்வில் வெற்றிப் பெறுவது? என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது. எனவே நாம் இப்போது NCERT புத்தகங்களை எப்படி படிப்பது என்பதைப் பார்ப்போம்.
நீட் தேர்வில் உயிரியல் (Biology) பகுதியில் 90-95% வினாக்கள் NCERT புத்தகங்களில் இருந்து தான் கேட்கப்படுகின்றன. எனவே உயிரியல் பாடத்தில் 360க்கு 360 மதிப்பெண்கள் எடுக்க விரும்பினால், அது மிகவும் எளிதான ஒன்று. NCERT புத்தகங்கள் உயர் தரத்தில் இருந்தாலும், சரியான முறையில் படித்தால், தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதாக நீங்கள் விடையளிக்கலாம்.
இதையும் படியுங்கள்: புதிதாக 40 விருப்பப் பாடங்கள்… அண்ணா பல்கலை. சூப்பர் முயற்சி!
நீட் தேர்வில் வினாக்கள் NCERT புத்தகங்களில் இருந்து நேரடியாக கேட்கப்படாது, ஆனால் இந்த புத்தகங்களை புரிந்து படித்தால் உங்களால் அனைத்து வினாக்களுக்கும் எளிதாக விடையளிக்க முடியும்.
NCERT புத்தகங்களில் உள்ள ஓவ்வொரு வரியும் உங்களுக்கு விடையளிக்க உதவும். எனவே ஓவ்வொரு வரியையும் புரிந்து படிக்க வேண்டும். ஓவ்வொரு வரியையும் ஒரு வினாவாக மாற்றி குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு வரியையும் வினாவாக மாற்றி படிப்பது தான் வெற்றிக்கான முக்கிய சீக்ரெட்.
அடுத்ததாக ஒரு பத்தியை முழுமையாக படித்து, அவற்றிலிருந்து அதிகப்படியான வினாக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே கேட்கப்பட்ட வினாக்களுடன் ஒப்பிட்டு, அதாவது முந்தைய ஆண்டில் எவ்வாறு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து, வினாக்களை உருவாக்க வேண்டும். வினாக்களை கொள்குறி வகை (MCQ) வினாக்களாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் உங்களால் தேர்வுகளில் விடையளிக்க முடியும். பல்வேறு தேர்வு வாரியங்களில் கேட்கப்பட்ட வினாக்களையும் ஒப்பிட்டு பார்த்து, வினாக்களை உருவாக்கி விடையளித்து பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.
இப்படியாக ஒவ்வொரு பாடத்திற்கும்150 முதல் 200 வினாக்கள் வரை உருவாக்கிக் கொண்டால், இவற்றிலிருந்து தான் பெரும்பாலும் வினாக்கள் வரும். தேவைப்பட்டால் பாடத்திற்கு ஏற்ப கூடுதல் வினாக்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். வினாக்களை உருவாக்கும்போது, தேர்வில் எப்படி வினாக்கள் கேட்கப்படும் என்பதை மனதில் வைத்து வினாக்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இப்படியாக நீங்கள் NCERT புத்தகங்களை வினாக்களாக மாற்றி, படித்துக் கொண்டால் உயிரியல் மட்டுமல்லாமல், இயற்பியல், வேதியியல் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நீங்கள் மருத்துவராகலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil