மொத்தம் 67 மாணவர்கள் நீட் அகில இந்திய ரேங்க் (AIR) 1-ஐ எவ்வாறு பெற்றனர் என்பதை விளக்கி தேசிய தேர்வு முகமை ஒரு பொது அறிக்கையை வெளியிட்டுள்ளது. நேர இழப்பை ஈடுசெய்ய 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ‘கிரேஸ் மார்க்’ (கருணை மதிப்பெண்கள்) வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இருப்பினும், அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தவில்லை.
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, “1563 விண்ணப்பதாரர்களுக்கு நேர இழப்பிற்கான மதிப்பெண் வழங்கப்பட்டது மற்றும் அத்தகைய விண்ணப்பதாரர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் -20 முதல் 720 மதிப்பெண்கள் வரை மாறுபடும். இவர்களில், இழப்பீட்டு மதிப்பெண்கள் காரணமாக இரண்டு விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களும் முறையே 718 மற்றும் 719 மதிப்பெண்களாக மாறியது.
இதனுடன், தேசிய தேர்வு முகமை ஜூன் 4 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், அடிப்படை இயற்பியல் பகுதியில் ஒரு கேள்விக்கு தவறான விடையைப் பெற்றதால் மொத்தம் 44 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, இது அவர்களின் பழைய 12 ஆம் வகுப்பு NCERT அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள தவறான குறிப்பின் அடிப்படையில் இருந்தது, அதனால் அதற்கு "கருணை மதிப்பெண்கள்" வழங்கப்பட்டது. இந்த முடிவு அவர்களின் மதிப்பெண்களை 715 இலிருந்து 720 ஆக உயர்த்தியது, மேலும் டாப்பர்களின் எண்ணிக்கையை வியத்தகு முறையில் அதிகரித்தது என்று தெரிவித்தது.
720/720 மதிப்பெண்கள் பெற்ற 67 பேரில், 44 பேர் இயற்பியலின் ஒரு விடைக்குறிப்பை திருத்தியதன் காரணமாகவும், 6 பேர் நேர இழப்பிற்கான ஈடுசெய்யும் மதிப்பெண்களின் காரணமாகவும் முதலிடம் பெற்றதாக தேசிய தேர்வு முகமை கூறுகிறது.
மோடி அரசை குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்
தேசிய தேர்வு முகமை தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், மாணவர்கள், நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் விளக்கத்தில் திருப்தி அடையவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரியங்கா காந்தி, சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ மூலம் அரசாங்கத்திடம் பதில் கோரினார்.
“முதலில் நீட் தேர்வு வினாத் தாள் கசிந்தது, இப்போது அதன் முடிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு, பலவிதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மறுபுறம், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது,” என்று பிரியங்கா காந்தி கூறினார்.
லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான முறையான கேள்விகளுக்கு மாணவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இந்த முறையான புகார்களை விசாரித்து தீர்வு காண்பது அரசாங்கத்தின் பொறுப்பு இல்லையா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ‘உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்மட்ட விசாரணை’ கோரினார். நீட் உள்ளிட்ட பல தேர்வுகளில் வினாத் தாள் கசிவு, மோசடி மற்றும் ஊழல் ஆகியவை முக்கிய அங்கமாகிவிட்டன என்று மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.
சச்சின் பைலட், ரன்தீப் சிங் சுரேஜ்வாலா மற்றும் அசோக் கெலாட் போன்ற சில காங்கிரஸ் தலைவர்களும் இந்த பிரச்சினை குறித்து பேசினர். அசோக் கெலாட் இந்த பிரச்சனையை விசாரித்து அனைவருக்கும் நீதியை உறுதி செய்ய அழைப்பு விடுத்தார்.
மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (NEET-UG) முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
நீட் தேர்வில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், அதாவது 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 67 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். நீட் வினாத்தாளில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படுவதால் இது ‘சாத்தியமற்றது’ என்று தோன்றுகிறது. "இது ஒரு அதிசயம். இன்னும் தேசிய தேர்வு முகமை மற்றும் மோடி அரசு அதை நியாயப்படுத்துகிறது,” என்று ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார், இவை அனைத்தும் 24 லட்சம் மாணவர்களை பாதிக்கும் தேர்வின் நம்பகத்தன்மையில் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளன என்றும் அவர் கூறினார்.
விசாரணை நடத்த மாணவர்கள் கோரிக்கை
இதற்கிடையில், ஜெய்ப்பூர் அசோசியேஷன் ஆஃப் ரெசிடென்ட் டாக்டர்ஸ் (JARD) அமைப்பு, வினாத் தாள் கசிவு, டாப்பர்களின் எண்ணிக்கை மற்றும் பலவற்றில் தேசிய தேர்வு முகமை மௌனமாக இருப்பது குறித்து தங்கள் கவலையைப் பகிர்ந்துள்ளனர். JARD சி.பி.ஐ விசாரணையை கோருகிறது மற்றும் எதிர்காலத்தில் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமையின் அதிகாரத்தை ரத்து செய்ய கோருகிறது.
FAIMA டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் ரோஹன் கிருஷ்ணனும், "இதுபோன்ற உணர்ச்சிகரமான தேர்வுகளில் இது போன்ற நிலை ஒரு மோசமான தோற்றம்" என்று கூறி பிரச்சினையை எழுப்பினார்.
நீட் தேர்வு முடிவின் நேர்மை குறித்து பல மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில், அறிக்கைகளின்படி, நீட் தேர்வை நடத்தும் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை கேள்விக்குட்படுத்தும் மனு மீது கல்கத்தா உயர்நீதிமன்றம் தேசிய தேர்வு முகமையிடம் பதில் கோரியுள்ளது, என்று ஒரு லைவ் லா அறிக்கை கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.