தேசிய தேர்வு முகமை (NTA) திருத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2024 இறுதி விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் அட்டையை வெளியிட்டுள்ளது. இயற்பியல் கேள்விகளின் சரியான விருப்பத்தை கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை சர்ச்சைகளால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீட் தேர்வு திருத்தப்பட்ட முடிவு இணைப்பு exams.nta.ac.in/NEET/ இல் கிடைக்கிறது.
தேர்வு முடிவை தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்ப எண், மின்னஞ்சல், பிறந்த தேதி உள்ளிட்ட உள்நுழைவு விபரங்களை உள்ளிட வேண்டும். பின்னர் திரையில் உங்கள் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும்.
அகில இந்திய அளவில் முதலிடத்தை இந்த ஆண்டு 67 மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். அவர்களில், ஆறு பேர், கண்காணிப்பாளர்களின் தவறுகளால் தேர்வின் போது இழந்த நேரத்திற்கு கூடுதல் மதிப்பெண்களுடன் ஈடுசெய்யப்பட்டதால் பட்டியலில் இருந்தனர். இயற்பியல் கேள்விக்கு தவறாக விடை பெற்று கருணை மதிப்பெண்கள் பெற்றதால் 44 பேர் முதலிடம் பிடித்தனர். திருத்தப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டவுடன், ஒரே ஒரு துல்லியமான பதில் மட்டுமே இருக்கும் என்றும், அதைத் தவிர வேறு எந்த விருப்பத்திற்கும் பதிலளித்தவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்காது என்றும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்ததால், தேர்வர்களின் தரவரிசை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, இந்த 44 பேரின் மதிப்பெண்கள் இப்போது 720க்கு 715 ஆக மாறியுள்ளது. மீதமுள்ள 14 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். மேலும் 720க்கு 716 மதிப்பெண்கள் பெற்ற 70 பேர் உள்ளனர். இந்த 44 பேர் இப்போது அவர்களுக்குப் பிறகுதான் தரவரிசைப்படுத்தப்படுவார்கள்.
இதுதவிர 4.2 லட்சம் மாணவர்களுக்கும் இயற்பியல் கேள்விக்கான பதிலால் மதிப்பெண்களில் மாற்றம் இருக்கும். மேலும் அதற்கு ஏற்றாற்போல் தரவரிசையிலும் மாற்றம் இருக்கும்.
பொது மற்றும் பொது-மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கட்-ஆஃப் கடந்த ஆண்டு 720-137 ஆக இருந்து 720-164 ஆக அதிகரித்துள்ளது. நீட் தேர்வில் அகில இந்திய பொதுத் தகுதிப் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில் நீட் சதவீதத்தை தேசிய தேர்வு முகமை தீர்மானிக்கிறது. இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 24,06,079 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர், அவர்களில் 23,33,297 பேர் தேர்வு எழுதினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.