கொரோனா பொது முடக்கநிலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வீட்டுப்பள்ளித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 297 காணொளி பாடங்களை பள்ளி கல்வித் துறை தயாரித்தது. 12ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் அரசு லேப்டாப்பில் முதல்கட்டமாக 136 காணொளி பாடங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டன.
தற்போது, இத்திட்டத்தை தமிழக அரசு நீட் தேர்வு மாணவர்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறது. அதன்படி, அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுத ஆர்வப்படும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான காணொளி பாடங்களை வழங்க அரசு முன்வந்துள்ளது.
இத்திட்டம், நீட் தேர்வு எழுதும் கிராமப் புற மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், இதுநாள் வரை தமிழக அரசின் இலவச நீட் தேர்வு பயற்சி வகுப்பில் ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து அதிகபட்சமாக 2 அல்ல 3 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
மேலும், நீட் தேர்வுக்கு முன்னதாக நடைபெறும் சிறப்பு குடியிருப்பு பயிற்சித் திட்டத்திலும், மாநிலம் முழுவதும் குறைந்த அளவிலான மாணவர்களுக்கு மட்டுமே தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதுவும், இந்த மாணவர்கள் தங்கள் முந்தைய வகுப்புகளில் வெளிபடுத்திய செயல்திறன் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
எனவே, இந்த புதிய முயற்சியின் கீழ், நீட் தேர்வு எழுத ஆர்வப்படும் அனைத்து மாணவர்களுக்கும் நீட் வகுப்பு பாடங்கள் கிடைக்க இருக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil