கட்டுரையாளர்: சௌரப் குமார்
நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பது ஒவ்வொரு நீட் (NEET) தேர்வாளர்களின் கனவாகும். சிறந்த எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் (MBBS/BDS) படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) உயர் தரவரிசையை அடைவதற்கான ஒவ்வொரு தடையையும் அவர்கள் கடக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், இந்த லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தவறான படிப்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, விலைமதிப்பற்ற மற்றும் தரமான படிப்பு நேரத்தை வீணடிப்பதால் முயற்சியில் வெற்றியடையத் தவறிவிடுகிறார்கள்.
திறமையான படிப்புத் திட்டத்தைக் கொண்ட எந்தவொரு விண்ணப்பதாரரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்பது உண்மைதான் என்றாலும், சில சமயங்களில் முட்டாள்தனமான தவறுகள் காரணமாக விண்ணப்பதாரரின் நீட் மதிப்பெண் குறைந்து எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளை பாதிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்த பிழைகளை சரியான நேரத்தில் உணர்ந்து, நீட் 2023 தேர்வில் உயர் தரவரிசையை அடைவதற்கான அவர்களின் தயாரிப்புகளுடன் முன்னேற வேண்டும்.
இதையும் படியுங்கள்: கல்லூரி மாணவர்களுக்கு தொழில் திறன் சான்றிதழ் படிப்பு; ஐ.ஐ.டி சென்னை அறிமுகம்
நீட் தேர்வுக்கு தயாராகும் போது தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள்
ஒரு பாடத்தில் அதிக கவனம் செலுத்துதல்
நீட் தேர்வு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல், இவை அனைத்தும் சம வெயிட்டேஜைக் கொண்டுள்ளன. சில நேரங்களில், மாணவர்கள் ஒரு பாடத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் மற்றொன்றை மிகவும் கடினமாக நினைத்து தவிர்க்கிறார்கள்.
இயற்பியல் கணக்குகளைத் தவிர்க்க வேண்டாம்
மாணவர்கள் இயற்பியல் கணக்குகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள், இது அவர்களின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக மாறும், ஏனெனில் பலவீனத்திலிருந்து ஓடுவது ஒருபோதும் தீர்வாகாது. பலவீனங்களைக் கடந்து, விண்ணப்பதாரர்கள் தங்கள் தயாரிப்புகளில் முன்னேறுவது மட்டுமல்லாமல், நீட் தேர்வு எழுதும்போது அவர்களின் மன உறுதியையும் அதிகரிக்கும்.
பரந்த அளவிலான புத்தங்களைத் தேர்ந்தெடுப்பது
நீட் தேர்வுக்கு தயாராகும் போது ஒரே ஒரு புத்தகத்தில் இருந்து படிப்பது போதாது என்றாலும், ஒவ்வொரு தலைப்புக்கும் பல்வேறு புத்தகங்களைப் பார்ப்பது சிறந்த யோசனையல்ல. வெவ்வேறு மூலங்களிலிருந்து படிப்பது குழப்பம் மற்றும் சந்தேகங்களுக்கு வழிவகுக்கும், இது மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க கடினமாக இருக்கும்.
NCERT புத்தகங்கள் நீட் தேர்வுக்கான சிறந்த புத்தகங்களாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் இந்தப் பாடப்புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் நேரடியாக உள்ளன. தேவைப்பட்டால் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 1 அல்லது 2 புத்தகங்களை கூடுதலாக பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள், ஆனால் அதற்கு மேல் பார்க்க வேண்டாம்.
மாதிரித் தேர்வுகள்/முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களில் பயிற்சி பெறாதது
சில நேரங்களில் மாணவர்கள் தங்களின் தயாரிப்பு நிலையைச் சோதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஏனெனில் அது அவர்களின் மன உறுதியைக் குறைக்கும், ஆனால் இது ஒரு மோசமான யோசனை. எந்தவொரு போட்டித் தேர்வுக்கும் உங்கள் தயாரிப்பை தவறாமல் சோதிப்பது முக்கியம், ஏனெனில் இது மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பலவீனமான பகுதிகளைக் கண்டறிய உதவும்.
மாதிரித் தேர்வுகளைத் தீர்க்கும் பயிற்சியானது, எந்தவொரு குறிப்பிட்ட கேள்வி அல்லது வினாத் தாளுக்கு விடையளிக்கும்போது மாணவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைக்கவும் உதவும். முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் தேர்வு முறை மற்றும் தேர்வில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.
மாதிரித் தேர்வுகள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களில் நீங்கள் சிறப்பாகச் செயல்படாதபோது நம்பிக்கையையும் உறுதியையும் இழக்காமல் இருப்பதும் முக்கியம், இவை பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து எங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கண்டறிய மட்டுமே.
எதிர்மறையான சுய பேச்சு
சரியாகப் பயன்படுத்தினால், நேர்மறை சுய பேச்சு என்பது மிகவும் சக்திவாய்ந்த உளவியல் கருவிகளில் ஒன்றாகும். வாழ்க்கையில் நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி உங்களுக்குள் நேர்மறையாகப் பேசுவது, நீட் தேர்வுக்கான தயாரிப்பு செயல்முறைக்கு உதவும்.
"தேர்வு மிகவும் கடினமானது", "நான் இதற்குத் தயாராக இல்லை" அல்லது "என்னால் அத்தகைய உயர்நிலைத் தேர்வில் வெற்றிபெற முடியாது" என்று நீங்கள் எப்போதாவது நினைத்தால், அந்த எண்ணத்திலிருந்து விலகி, உங்களை நேர்மறையாக உணரவும் சிந்திக்கவும் செய்யும் செயல்பாடுகள் சிலவற்றில் ஈடுபடுங்கள்.
படிப்பிற்காக நாள் முழுவதும் ஒரு அறையில் இருப்பது
மாணவர்கள் தங்கள் அறைகளில் தங்களைப் பூட்டிக்கொண்டு நாள் முழுவதும் படிப்பது முக்கியம் என்று சிலர் நினைக்கலாம், ஆனால் மாணவர்கள் ஓய்வெடுப்பது அவசியம். ஓய்வு எடுத்துக்கொண்டு சிறிது நேரம் பூங்காவிற்குச் செல்வது அல்லது உங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது மூளையை ரிலாக்ஸ் செய்து கவனத்தை மீட்டெடுக்க உதவும்.
நீட் தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தீவிரமாக, தயாரிப்புகளை அதிகரிக்க வேண்டும். ஒரு மூலோபாய தயாரிப்பு நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தேர்வு எழுதும் மாணவர்கள் உயர் தரவரிசையைப் பெற முடியும் மற்றும் நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான முதல் படியில் ஏறுவார்கள்.
(கட்டுரையாளர்: தலைமை கல்வி அதிகாரி (CAO), வித்யாமந்திர் வகுப்புகள்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.