தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதி தாமதம் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற கல்வி ஏற்பாடுகளை பாதித்துள்ளது.
திட்ட ஒப்புதல் வாரியம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் 3,586 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், மத்திய அரசின் பங்கு 2,152 கோடி (60%), மாநில அரசின் பங்கு 1,434 கோடி (40%) ஆகும். மத்திய அரசு தனது பங்கை நான்கு தவணைகளில் வெளியிட உள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், நிதியை விடுவிப்பது குறித்து தமிழகத்தின் கடிதங்களுக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. இதன் காரணமாக 15,000 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடைக்காமல் போகலாம்.
மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுதல், தொலைதூரப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கான ஆசிரியர் பயிற்சி மற்றும் தற்காப்புப் பயிற்சி ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக அரசின் பங்கு நிதியில் கடந்த சில மாதங்களாக சமக்ர சிக்ஷா அபியான் (SSA) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இனி, மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமல் இத்திட்டத்தை நடத்துவது சவாலாக இருக்கும்.
புது தில்லியில் ஜூலை மாதம் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டங்களின் போது, நிதியை வெளியிட பி.எம். ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பி.எம். ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்ற விதியை தவிர்த்து, ஒப்புதல் பெறுவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியது. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
பி.எம் ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (PM SHRI) திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை மாநிலம் குறிப்பாக எதிர்க்கிறது.
இதுதவிர, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 5+3+3+4 பாடத்திட்ட அமைப்பு மற்றும் தேசிய கல்வி கொள்கையின் படி ஆறாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன.
1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இரு மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. மாநிலக் கல்விக் கொள்கையை (SEP) உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான நீதிபதி டி முருகேசன் தலைமையில் ஒரு குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்த மாநிலக் கல்விக் கொள்கை குழு அதன் பரிந்துரைகளில் மும்மொழி கொள்கையை நிராகரித்தது. மேலும் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளையும் எதிர்த்தது.,
தமிழ்நாட்டைப் போலவே, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி மற்றும் பஞ்சாப் போன்ற சில மாநிலங்களும் PM SHRI பள்ளிகளை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.
என்.சி.இ.ஆர்.டி. இன் முன்னாள் இயக்குனர் கிருஷ்ண குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், குழந்தைகளின் கல்வியில் முதன்மையான நலத்திட்டமாக சமக்ர சிக்ஷா அபியான் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இதை இப்படி நடத்த முடியாது. ஏனெனில் இது ஏழை பின்னணியில் இருந்து வரும் லட்சக்கணக்கான குழந்தைகளை பாதிக்கலாம், என்றார்.
சமக்ரா சிக்ஷா மற்றும் பி.எம்.ஸ்ரீ பள்ளி ஆகியவை மத்திய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்கள். மாநில அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, சமக்ரா சிக்ஷா நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பதில் எந்த நியாயமும் இல்லை, தமிழக எம்.பி.க்கள் இந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்ப வேண்டும், என்று கல்வி ஆர்வலர் பிபி பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.