மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை, புதிய கல்விக் கொள்கையானது மாநிலங்களில் ஹிந்தியை திணிக்காது என்றும், தமிழகத்தின் எதிர்ப்பின் பின்னணியில் "அரசியல் காரணங்கள்" இருப்பதாகவும் கூறினார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
“இந்தி மட்டுமே இருக்கும் என்று தேசிய கல்வி கொள்கை 2020 இல் நாங்கள் ஒருபோதும் கூறவில்லை; தாய்மொழியில் கல்வி அமையும், தமிழகத்தில் தமிழ் வழியில் கற்பித்தல் இருக்கும் என்று மட்டுமே நாங்கள் கூறியுள்ளோம்” என்று தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், கல்வி அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
“சில நபர்களின் அரசியல் லட்சியங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தேசிய கல்வி கொள்கை 2020 இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்துகிறது, அது ஹிந்தி, தமிழ், ஒடியா அல்லது பஞ்சாபி. எல்லா மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணமாக சிலர் எதிர்க்கிறார்கள்” என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
முன்னதாக தில்லி பல்கலைக்கழகத்தில் இந்துக் கல்லூரியின் 126வது நிறுவன தினத்தைக் குறிக்கும் நிகழ்வில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வேலைவாய்ப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பில் அதன் பங்கை வலியுறுத்தி, தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் கீழ் மூன்று மொழிக் கொள்கை குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
"நாட்டில் மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்" என்று தர்மேந்திர பிரதான் கூறினார். “தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வேலைவாய்ப்பைக் காணக்கூடிய ஒரு அமைப்பு நாட்டிற்குத் தேவைப்படுகிறது. சமூக, கலாசார மற்றும் பொருளாதாரத் தேவைகளை மனதில் கொண்டு இந்த அவசியத்தை வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்,” என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார்.