யு.ஜி நீட் தேர்வு முறைகேடு, யு.ஜி.சி நெட் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வுகள் ரத்து மற்றும் ஒத்திவைப்புகளுக்கு மத்தியில், மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சிங் கரோலாவை தேசிய தேர்வு முகமையின் புதிய தலைமை இயக்குநராக நியமித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சுபோத் குமார் சிங் மாற்றப்பட்டு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வினாத் தாள் கசிவு விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில், கல்வி அமைச்சகம் சுபோத் குமார் சிங்கை ணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளது. கர்நாடக கேடரின் 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கரோலா நவம்பர் 2017 இல் ஏர் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.
2019 ஆம் ஆண்டில், புதிய சிவில் விமானச் செயலாளராக பிரதீப் சிங் நியமிக்கப்பட்டார். அவர் மீண்டும் 2022 இல் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்புக்கு (ITPO) தலைவராக மாற்றப்பட்டார். அப்போதிருந்து அவர் அமைப்பில் பணியாற்றி வருகிறார்.
இப்போது கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் டி.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் இப்பணியில் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர் தனது துறை நிபுணத்துவம் தவிர, கரோலா 2012-ல் மின் ஆளுமைக்கான (e-governance) தேசிய விருதையும் மற்றும் 2013-ல், பிரதமரின் சிறந்த பொது நிர்வாக விருதையும் பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“