/indian-express-tamil/media/media_files/2025/09/04/nirf-rankings-2025-list-2025-09-04-13-46-04.jpg)
NIRF Rankings 2025 list
மத்திய கல்வி அமைச்சகம் இன்று என்.ஐ.ஆர்.எஃப். 2025 ( NIRF 2025) தரவரிசையை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் இந்தத் தரவரிசைகள், இம்முறை தாமதமாக வெளியாகியுள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் இந்தத் தரவரிசை, இந்த ஆண்டு 17 பிரிவுகளின் கீழ் நிறுவனங்களை மதிப்பிட்டுள்ளது. இதில், ஒரு புதிய 'நிலையான வளர்ச்சி இலக்குகள்' (SDG) பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது, இது இந்த ஆண்டுக்கான மிக முக்கிய அம்சமாகும்.
முதல் 10 இடங்கள் யாருக்கு?
ஒட்டுமொத்தப் பிரிவில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Technology-IIT), சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களை இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science), பெங்களூரு, IIT பம்பாய், IIT டெல்லி, IIT கான்பூர், IIT காரக்பூர், IIT ரூர்க்கி, டெல்லி எய்ம்ஸ், JNU மற்றும் BHU ஆகியவை பிடித்துள்ளன.
கடந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலில், பொறியியல் பிரிவில் IIT மெட்ராஸ், மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ், மேலாண்மைப் பிரிவில் IIM அகமதாபாத் மற்றும் பல்கலைக்கழகங்கள் பிரிவில் IISc பெங்களூரு ஆகியவை முதலிடத்தில் இருந்தன.
கவனிக்க வேண்டிய புதிய மாற்றங்கள்!
இந்த ஆண்டு என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசையில் பல புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்குவதாகும். ஒரு கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் வெளியிட்ட ஆராய்ச்சிப் பணிகள் தவறான தகவல்கள் அல்லது மோசடி காரணமாக திரும்பப் பெறப்பட்டால், அந்த நிறுவனத்திற்கு "ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறை" பிரிவின் கீழ் எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு இது ஒரு சிறிய அளவிலேயே செயல்படுத்தப்பட்டாலும், வரும் ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், முதன்முறையாக, நிறுவனங்களின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) குறித்த செயல்பாடுகளும் மதிப்பிடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற அம்சங்களில் நிறுவனங்கள் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகின்றன என்பதை இது மதிப்பிடும். இதன்மூலம், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை என்பது வெறும் கல்வித் திறனை மட்டும் அளவிடாமல், நிலையான மற்றும் பொறுப்பான கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒரு தளமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பொறியியல், மேலாண்மை, மருத்துவ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என பல பிரிவுகளுக்குத் தனித்தனியாக தரவரிசைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.